Homeசெய்திகள்தலையங்கம்ரூ.2,000 கோடி அரசு நிலம் கைமாறுகிறதா? உலகளாவிய விளையாட்டு நகரத் திட்டம் ரத்து பின்னணியில் அதிர்ச்சித்...

ரூ.2,000 கோடி அரசு நிலம் கைமாறுகிறதா? உலகளாவிய விளையாட்டு நகரத் திட்டம் ரத்து பின்னணியில் அதிர்ச்சித் தகவல்கள்!

-

- Advertisement -

சென்னையைச் சுற்றியுள்ள ஓஎம்ஆர் (OMR) பகுதியில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்கும் வகையில் முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட ‘குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ (Global Sports City) எனப்படும் உலகளாவிய விளையாட்டு நகரத் திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. இதன் பின்னணியில் மாபெரும் ரியல் எஸ்டேட் மற்றும் நில முறைகேடு டீலிங் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

we-r-hiring

91 ஏக்கர் புறம்போக்கு நிலம்: காலேஜ் ஆக்கிரமிப்பு விவகாரம்!

சென்னையை அடுத்த OMR பகுதியில் அமைந்துள்ள பிரபல ஜேபிஆர் கல்வி நிறுவனங்களுக்குப் பின்னால் உள்ள 127 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 91 ஏக்கர் நிலம் அரசுக்குப் சொந்தமான புறம்போக்கு நிலமாகும். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் காலத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட இந்த இடத்தில், கல்லூரியின் விடுதிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை மீட்க கடந்த 1996-ம் ஆண்டு முதல் சட்டப்போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் இந்த 91 ஏக்கர் நிலம் முழுமையாக அரசுக்குச் சொந்தமானது என மீட்கப்பட்டது. மேலும், அந்த இடத்தை மீண்டும் ஆக்கிரமிப்பிலிருந்து காக்க அங்கு ‘குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ திட்டத்தை அரசு அறிவித்தது.

திடீரென ரத்து செய்யப்பட்ட விளையாட்டு நகரத் திட்டம்!

சர்வதேச தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில், ஓடும் தளம், நீச்சல் குளம், துப்பாக்கிச் சுடுதல், ஸ்கேட்டிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் அமையும் வகையில் பல நூறு கோடிகளில் திட்டமிடப்பட்ட இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டி ப்ராஜெக்ட், தற்போது எந்தவிதமான முறையான காரணங்களும் இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் ரத்து அறிவிப்புக்கு முக்கியக் காரணம், சம்பந்தப்பட்ட ஜேபிஆர் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்துடன் தொடர்புடைய அமைச்சரே இதற்குப் பின்னணியில் இருப்பதுதான் என்று கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நிலத்தின் உரிமையாளர்களுக்கும் தற்போதைய அமைச்சரவையில் உள்ளவர்களுக்கும் உள்ள தொடர்பு காரணமாக, இந்தத் திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் அந்த நிலம் சம்பந்தப்பட்ட தரப்புக்கே செல்லும் வகையில் ரகசிய டீலிங் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தின் பிடியில் அமைச்சர்: “நீங்கள் என்ன இங்கிலாந்து இளவரசரா?”

இதற்கிடையில், அமைச்சர் ஒருவர் மீது தொடுக்கப்பட்ட பாண்டிச்சேரி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் தரப்பில் “நான் மிகவும் பிசியாக இருப்பதால் ஆஜராக முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுப்பான உயர் நீதிமன்ற நீதிபதி, “நீங்கள் என்ன இங்கிலாந்து இளவரசரா? சட்டத்தை விடப் பெரியவரா? பிரதமராக இருந்தவர்கள்கூட நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்” என்று விளாசியுள்ளதுடன், உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். ஒருபுறம் கோர்ட் வழக்குகளில் ஆஜராகத் திணறும் அமைச்சர்கள், மறுபுறம் மத வழிபாட்டு நடைப்பயணங்கள் செல்வது குறித்தும் பொதுவெளியில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அரசு விளக்கம் அளிக்குமா?

தமிழகத்தில் ஊழலை ஒழிக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரசு நிலங்கள் மற்றும் திட்டங்களை எந்தவித விளக்கமும் இன்றி ரத்து செய்வது பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தசாப்த கால சட்டப்போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் அரசு சொத்துக்கள் எந்தவிதத் தடையுமின்றி உரிய முறையில் பாதுகாக்கப்படுமா அல்லது தனிநபர்களின் கைக்கு மாறுமா என்ற கேள்விக்கு தற்போதைய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வறட்சிப் பிடியில் தமிழகம்! உடனடியாக அவசரச் செயல் திட்டம் தேவை! -அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர்.

MUST READ