Homeசெய்திகள்தலையங்கம்தமிழர் மண்ணில் ஜோதிடப் பித்தலாட்டம்: நவீன பித்தளையைத் தங்கமாகக் காட்டும் ரத்தன் பண்டிட்டின் நச்சுப் பிரச்சாரத்திற்கு...

தமிழர் மண்ணில் ஜோதிடப் பித்தலாட்டம்: நவீன பித்தளையைத் தங்கமாகக் காட்டும் ரத்தன் பண்டிட்டின் நச்சுப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?

-

- Advertisement -

தந்தை பெரியார் விதைத்த பகுத்தறிவு மண்ணில், அறிவியலையும் சமூக நீதியையும் மூட்டை கட்டிவிட்டு, அடிமைத்தனத்தையும் மூடநம்பிக்கையையும் மீண்டும் விதைக்கத் துடிக்கும் நவீனக் கும்பல்களின் சதிவேலைகள் அரங்கேறி வருகின்றன. அந்த வரிசையில், தன்னை ஜோதிடர் என்று சொல்லிக்கொண்டு ஊடகங்களில் உளறித் கொட்டும் ரத்தன் பண்டிட் என்பவரின் நச்சுப் பேச்சுகள், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சுயமரியாதையையும் சீண்டக்கூடிய வகையில் அமைந்துள்ளன.

we-r-hiring

‘நான்தான் சிஎம் ஆக்கினேன்’ என்ற மட்டமான மார்தட்டல்!

“நான்தான் விஜய்யை முதலமைச்சர் ஆக்கினேன்” என்று மார்தட்டும் ரத்தன் பண்டிட்டின் திமிர் பிடித்த பேச்சு, ஒட்டுமொத்த வாக்காளர் பெருமக்களையும் ஜனநாயகத்தையும் அப்பட்டமாக இழிவுபடுத்துவதாகும். ஒரு ஜோதிடரின் கட்டளையால் ஆட்சிகள் மாற்றப்படுவதாகப் பிதற்றுபவர்கள், தேர்தல் களத்தில் அடி வாங்கியதை ஏன் அன்று கணிக்கத் தவறினார்கள்? பச்சையான சுயலாபத்துக்காகவும் காசுக்காகவும் ஊடகங்களில் ஏறி நின்று ஜோதிடப் புளுகுகளை அள்ளிவீசும் இத்தகைய மோசடி கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

6 மணிக்கு மேல் மக்களைப் பற்றி கவலைப்படக் கூடாதா?

ரத்தன் பண்டிட் உதிர்த்ததில் மிகக் கேவலமான மற்றும் ஆபத்தான கருத்து எதுவென்றால், “மாலை 6 மணிக்கு மேல் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்; கவலைப்பட்டால் லட்சுமி ஓடிவிடுவாள்” என்பதுதான்.

  • இதன்படி பார்த்தால், தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்கும் அரசாங்கமும் முதலமைச்சரும் மாலை 6 மணிக்கு மேல் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்கக் கூடாதா?

  • தமிழ்நாட்டின் மின் கட்டணம், விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கவலைப்படாமல் குப்பையில் வீசச் சொல்கிறதா இந்த ஜோதிட நச்சு?

  • மக்களைப் பற்றித் கவலைப்படாத, உழைப்பைச் சுரண்டும் இந்த சோம்பேறித்தனமான முட்டாள்தனத்தை எந்தக் காலத்திலும் தமிழ் மண் ஏற்றுக்கொள்ளாது!

1969-க்குப் பின் தமிழ்நாடு நாசமாகிவிட்டதா?

“1969-க்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் ஆன்மீகமும் ஜோதிடமும் அழிக்கப்பட்டு நாசமானது” என்று கூசாமல் பொய் சொல்கிறார் இந்த ரத்தன் பண்டிட். மறைமுகமாக ஆர்எஸ்எஸ் சனாதனக் கருத்துகளுக்குச் சாமரம் வீசும் இவருக்கு, திராவிட இயக்க ஆட்சிகள்தான் ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் கைகளில் அதிகாரத்தைக் கொடுத்தது என்ற எதார்த்தம் எரியும் நெருப்பாகத் தெரிகிறது. பார்ப்பன ஆதிக்கமும், ஜாதிய இம்சை அரசனாகத் திரிந்தவர்களும்தான் 1969-க்கு முன்பு கொடி கட்டிப் பறந்தனர்; அந்த இருண்ட காலத்தை மீண்டும் கொண்டுவரத் துடிக்கும் சதிகாரர்களின் ஊதுகுழல்தான் இந்த ஜோதிடர்.

மூடநம்பிக்கை ஒழிப்பே இந்தியாவின் விடுதலை!

மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கைக்கெதிராகக் குரல் கொடுத்து தன் உயிரைத் தியாகம் செய்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே போன்ற முற்போக்குவாதிகளின் இரத்தத்தை இந்தச் சனாதனக் கும்பல்கள் இன்னும் மறக்கவில்லை. ‘பிள்ளையார் பால் குடிக்கிறார்’ என்ற பித்தலாட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றிய அதே கும்பல், இன்று நவீன வடிவத்தில் அரசியல் அதிகாரத்தைப் பிடிக்கவும், மக்களின் மூளையை மழுங்கடிக்கவும் ஜோதிடத்தை ஆயுதமாக ஏந்தியுள்ளது.

அறிவியலையும் மனித நேயத்தையும் வளர்ப்பதே அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கும் கடமை. ஆனால், தமிழ்நாட்டைப் பின்னோக்கி இழுத்துச் செல்லத் துடிக்கும் ரத்தன் பண்டிட் போன்ற கயவர்களின் ஜோதிடப் பித்தலாட்டங்களை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உழைப்பை நம்பிய இந்தத் தமிழ் மண்ணில் மூடநம்பிக்கை நச்சைக் கக்கும் எத்தகைய கொழுப்புப் பிடிவாதத்தினரையும் அடித்து விரட்டும் பகுத்தறிவுத் தீ இன்னும் அணையவில்லை என்பதை இவர்களுக்கு உணர்த்துவோம்!

ரூ.2,000 கோடி அரசு நிலம் கைமாறுகிறதா? உலகளாவிய விளையாட்டு நகரத் திட்டம் ரத்து பின்னணியில் அதிர்ச்சித் தகவல்கள்!

MUST READ