83 வயதிலும் பணத் திமிரிலும், அதிகார மமதையிலும் அப்பாவிக் குழந்தைகளை வேட்டையாடிய காமுகன் கிரானைட் அதிபர் ‘ஜெம்’ வீரமணி போக்சோ சட்டத்தின் கீழ் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டுள்ளார்.


1971-ல் கிரானைட் ஏற்றுமதி தொழிலைத் தொடங்கி, இந்தோ-அமெரிக்க வர்த்தக சபை, இந்தோ-ஜப்பான் வர்த்தக சபை எனப் பன்னாட்டு அமைப்புகளின் தலைமைப் பதவிகளை அலங்கரித்து, ரூ.2,000 கோடிக்கு அதிபதியாக வலம் வந்த ஒரு தொழிலதிபரின் உண்மையான வக்கிர முகம் வெளிப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 13, 14, 15 வயது பச்சிளம் சிறுமிகளை சென்னையில் ரகசிய பங்களாவில் வைத்துச் சீரழித்த இந்தக் கிழட்டுப் பணமுதலைக்குக் கடந்த திமுக ஆட்சியாளர்கள் எப்படிக் கவசமாக நின்றார்கள் என்பதுதான் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.
50 கோடி ரூபாய் பேரம்!
சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில், பழைய சபையர் தியேட்டர் அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சொகுசு ஃபிளாட்டை வாடகைக்கு எடுத்து, தனது கூட்டாளிகளான சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கனிடம் கொடுத்துள்ளார் ஜெம் வீரமணி. ஏழ்மையிலும் வறுமையிலும் வாடும் ஒடுக்கப்பட்ட சமூகத்துச் சிறுமிகளை நயவஞ்சகமாக வலைவீசிப் பிடித்து வந்து வீரமணியாக்காக படுக்கையறைக்கு அனுப்பும் தரகு வேலையைச் சாந்தி தம்பதி செய்து வந்துள்ளது.
அங்கு நடக்கும் பாலியல் கொடுமைகளை மறைமுகக் கேமராக்கள் மூலம் படம்பிடித்த சாந்தி தம்பதி, அந்த வீடியோக்களை வைத்து வீரமணியிடம் ரூ.50 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர். காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் மூலம் ரூ.5 கோடிக்குத் திரைமறைவுப் பஞ்சாயத்து பேசப்பட்டதும், தென் மாவட்ட சாதி அரசியல் தலைவர்களை வைத்து மிரட்டல் விடுத்ததும் அரங்கேறியுள்ளதாகத் தெரிகிறது. இறுதியாகப் பேரம் படியாததால் இந்த விவகாரம் ஆதாரப்பூர்வமான வீடியோக்களுடன் காவல் நிலையப் படியேறியது.
கோடிகளுக்கு விலைபோன அதிகாரம்..!
2025 அக்டோபர் 6-ஆம் தேதியே சென்னை பெருநகர காவல் விபச்சார தடுப்புப் பிரிவுக்கு ஆதாரப்பூர்வமான வீடியோ காட்சிகள் அடங்கிய பென்டிரைவ் (Pendrive) போய்ச் சேர்ந்தது. ஆரம்பத்தில் சில நேர்மையான பெண் அதிகாரிகள் 07.10.2025 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
ஆனால், விஷயம் கோபாலபுரத்தின் மேலிடக் காதுகளுக்கும், அப்போதைய சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஐ.பி.எஸ்-க்கும் சென்ற அடுத்த கணமே திரைமறைவு அரசியல் பேரம் வெறியோடு அரங்கேறியது. சிறுமிகளைச் சீரழித்த பணமுதலை வீரமணியைக் காப்பாற்ற பல கோடிகள் கைமாறிய காரணத்தால், வழக்கை நேர்மையாக விசாரித்த அதிகாரிகள் அடுத்தடுத்துப் பந்தாடப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதோடு நிற்காமல், “வீடியோவில் இருக்கும் நபர் யார் என்றே அடையாளம் தெரியவில்லை, எனவே வழக்கை முடித்து வைக்கிறோம்” என்று நீதிமன்றத்திலேயே காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்து காமுகக் கிழவனை காப்பாற்ற அருண் ஐ.பி.எஸ். முயன்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆனால், நீதிமன்றம் அந்தப் பச்சைத் துரோகத்தை ஏற்க மறுத்ததால் விஷயம் தப்பியது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய காவல் ஆணையர் அமல்ராஜ் ஐ.பி.எஸ். பொறுப்பேற்ற பிறகே இந்த விவகாரத்தில் நியாயம் பிறந்து, ஜெம் வீரமணியும் அவனது கூட்டாளிகளும் குண்டுக்கட்டாகத் தூக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை, சுமார் 11 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய வழக்கில் ஏற்பட்ட நீண்ட தாமதத்திற்குப் பிறகு நடந்துள்ளது.
திமுக ஆட்சியில் தொடர்ந்த பாலியல் கொடூரம்!
திமுக ஆட்சி என்றாலே பாலியல் குற்றவாளிகளுக்குப் புகலிடமாக மாறுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆட்சிக்காலத்தில் பச்சிளம் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை எவருக்குமே பாதுகாப்பு இல்லாத கொடூரச் சூழலே நிலவியது. சென்னையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அண்ணா நகர் வழக்கில், ஆளுங்கட்சி விஐபிக்கள் சம்பந்தப்பட்டிருந்ததால் வழக்கையே மழுங்கடிக்கச் சட்டத்தின் பிடியைத் தளர்த்தினர்.
உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல்களை மூடி மறைக்கத் துறை ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. கோவையில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரங்கேறியபோதும், ஆளுங்கட்சியின் அதிகார பலத்தால் குற்றவாளிகள் தப்பியோடவே வழிகள் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து 80க்கும் மேற்பட்ட ஏழைகள் மாண்டபோதும், வேங்கைவயலில் மனிதக் கழிவு கலக்கப்பட்டபோதும் அமைதி காத்த ஆட்சி, இத்தகைய பணக்காரக் காமுகக் கும்பல்களுக்குப் பட்டுக் கம்பளம் விரித்துக் காப்பாற்றியது வெட்கக்கேடானது.
சமூக நீதியா… காமுகர்களுக்குக் கவசமா?
“சமூக நீதி, திராவிட மாடல், பெண்களின் பாதுகாப்பு” என்று மேடைக்கு மேடை நீலிக்கண்ணீர் வடித்த திமுக, நடைமுறையில் ஒடுக்கப்பட்ட சமூகத்து ஏழைச் சிறுமிகளைச் சீரழித்த பணமுதலைக்குப் பாதுகாப்புக் கவசமாக நின்றுள்ளது. ஒரு ஏழை திருடினால் உடனடியாகப் பாயும் சட்டம், கோடீஸ்வரக் காமுகன் என்றால் வழக்கை முடிக்க நீதிமன்றத்திற்கே பொய் அறிக்கை தருவதா?
யாருடைய உத்தரவின் பேரில் அந்த வழக்கை முடிக்க முயற்சி செய்யப்பட்டது? அந்த முடிவுக்கு வந்த அதிகாரிகள் யார்? விசாரணை அறிக்கையின் அடிப்படை என்ன? போக்சோ நீதிமன்றம் அதை ஏன் ஏற்கவில்லை? இந்த கேள்விகள் அனைத்திற்கும் விடை தேவை.
சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை அவசியம்
இத்தனை அநீதிக்கும் துணைபோன முன்னாள் ஆணையர் அருண் ஐ.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும், காமுகனிடம் பல கோடிகளைப் பெற்றுக்கொண்டு வழக்கைத் தாமதப்படுத்திய திமுக முக்கியப் புள்ளிகள் மீதும் விரிவான சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணை வைக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பணமும் அதிகாரமும் இருந்தால் எந்தக் கொடூரத்தைச் செய்தும் தப்பித்துவிடலாம் என்ற மமதையில் இருந்த வீரமணிகள் போன்ற கயவர்களுக்கும், அவர்களைக் காப்பாற்றிய அரசியல் புரோக்கர்களுக்கும் இந்த கைது நடவடிக்கை ஒரு மரண அடியாக அமைந்திருக்கிறது!
இது, வீரமணி கைது செய்யப்பட்டுவிட்டார் என்பதோடு முடிந்துவிடக்கூடிய வழக்கு அல்ல. மாறாக, இப்போது தான் உண்மையான விசாரணை தொடங்க வேண்டும். அதற்குத்தான் எஸ்.ஐ.டி. கோரிக்கை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது நீதிமன்ற விசாரணை நடைபெறட்டும். குற்றம் நிரூபிக்கப்பட வேண்டியது நீதிமன்றத்தில்தான். ஆனால் அதே நேரத்தில், வழக்கு தொடங்கிய நாளிலிருந்து கைது செய்யப்பட்ட நாள் வரை நடந்த ஒவ்வொரு நடவடிக்கையும் தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
குறிப்பாக, 2025 அக்டோபர் 6 அன்று பென்டிரைவ் கிடைத்தது முதல், 2026 ஆகஸ்ட் மாதத்தில் கைது நடவடிக்கை நடைபெற்றது வரை என்ன நடந்தது?
சட்டம் அனைவருக்கும் சமமா?
பாதிக்கப்பட்டவர் ஏழையாக இருந்தால் சட்டம் வேகமாகச் செயல்படுகிறதா? பணமும் அதிகாரமும் கொண்டவர் குற்றச்சாட்டில் சிக்கும்போது அதே வேகம் இருக்கிறதா? இந்தக் கேள்விக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஒரு சிறுமி பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் உண்மை வெளிவருவதற்கு 11 மாதங்கள் தேவைப்பட்டால், நாளை ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தின் மகளுக்கு இதே நிலை ஏற்பட்டால் என்ன ஆகும்? அதுதான் தமிழக மக்கள் கேட்க வேண்டிய கேள்வி. பணம் இருந்தால் சட்டத்தைத் தாமதப்படுத்தலாம்; அதிகாரம் இருந்தால் அதிகாரிகளை மாற்றலாம்; அரசியல் தொடர்புகள் இருந்தால் விசாரணையைத் திசைதிருப்பலாம் என்ற ஒரு நம்பிக்கை சமூகத்தில் உருவாகிவிட்டால், அது ஜனநாயகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் மிகப்பெரிய ஆபத்து.
மேலும், திமுகவுடன் அப்போது கூட்டணியில் இருந்த தொல். திருமாவளவன், பெ. சண்முகம் உள்ளிட்டோர் மவுனித்து இருந்ததன் பின்னணி குறித்தும் கேள்வி எழுகிறது.
