மலேசியாவில் உயர்கல்வி பயின்று வரும் உசிலம்பட்டி மாணவர் பாரதிதாசனுக்கு நிறுத்தப்பட்டுள்ள அயலகக் கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இங்கிலாந்தில் கல்வி பயிலத் தேர்வாகியுள்ள 316 மாணவர்களுக்கு விசா கிடைக்கத் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விரிவான விவரம் வருமாறு,

மலேசிய மாணவர் பாரதிதாசனுக்கு நிலுவைத் தொகை
தமிழ்நாடு அரசின் ‘டாக்டர் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் தொகைத் திட்டத்தின்’ கீழ் தேர்வு செய்யப்பட்டு, மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் திசுப் பொறியியல் மற்றும் மீள் உருவாக்க மருத்துவத் துறையில் முனைவர் பட்ட (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருபவர் மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன்.
அவருக்கு நடப்பு ஆண்டிற்கான கல்வி உதவித் தொகையில், நிலுவையில் உள்ள ரூ. 21 லட்சத்தை இன்னும் தமிழ்நாடு அரசு வழங்கவில்லை. கடந்த ஜூன் 8-ஆம் தேதியே அவர் அதற்கான ரசீதுகளையும், பல்கலைக்கழகத்தின் தரநிலை அறிக்கையையும் சமர்ப்பித்துவிட்ட நிலையில், புதிய விதிகளைக் காரணம் காட்டித் தொகையை வழங்காமல் காலதாமதம் செய்வது முறையல்ல. இதன் காரணமாக, அவர் படிப்பை இடைநிறுத்தம் செய்ய வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவரை இவ்வாறு அலைக்கழிப்பது அரசுக்கு அழகல்ல.
இங்கிலாந்து விசா விவகாரத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்துக
அதேபோல, அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் தொகைத் திட்டத்தின்கீழ் இங்கிலாந்து (UK) பல்கலைக்கழகங்களில் பயிலத் தேர்வாகியுள்ள 316 ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு விசா வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் உதவித் தொகை உத்தரவாதத்தை ஏற்க மறுக்கும் இங்கிலாந்து தூதரகத்துடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களின் உயர்கல்வியை உறுதி செய்யத் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனிதாக்களின் கனவை நனவாக்க அரசு முன்வர வேண்டும்
முதல் தலைமுறையாகக் கண்டம் தாண்டிச் சென்று கல்வி பயில முயலும் மாணவர்களைத் தொடக்கத்திலேயே மன உளைச்சலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கக் கூடாது. சட்டச் சிக்கல்களையும் அரசாணைகளையும் மனிதாபிமான அடிப்படையில் அணுகி, காலங்காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளித்து உதவ வேண்டியது அரசின் அவசியக் கடமையாகும் என்று கி.வீரமணி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் மருத்துவமனையில் அனுமதி:
