சிங்காரவேலர் அறிவகம் திறப்பு: பொதுவுடமை கவிஞர் தமிழ்ஒளியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘சிங்காரவேலர் அறிவகத்தை’ மாநில செயலாளர் பெ.சண்முகம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்துப் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இரட்டை நிலைப்பாடு குறித்த விளக்கம்:
மக்களுக்கு ஆதரவான திட்டங்களை எப்போதும் மனப்பூர்வமாக வரவேற்பதும், மக்களுக்குப் பாதகமான திட்டங்களை உறுதியாக எதிர்ப்பதுமே மார்க்சிஸ்ட் கட்சியின் எக்காலத்து அணுகுமுறை என்று சண்முகம் தெளிவுபடுத்தினார்.
தவெகவினர் இதனைப் புரிந்து கொள்ளாமல் விமர்சிப்பதாகவும், தங்களின் இந்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு அரசியல் தொடர்ந்து இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டனர்.
ஊழல் முறைகேடு மற்றும் முதலமைச்சர் மீது கேள்வி:
தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் ஊழல் முறைகேடுகள் குறித்துப் பேசுகையில், ஆதாரங்கள் கையில் இருக்கும்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவரே தங்களைப் பார்த்துக் கேள்வி கேட்பது ஆச்சரியமாக உள்ளதாக அவர் விமர்சித்தார்.
மீனவர்கள் குடியிருப்பு மற்றும் தலைமைச் செயலக விவகாரம்: பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் மீனவர்களை அப்புறப்படுத்திவிட்டு தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சருக்கே தெரியாமல் அரசாணை வெளிவந்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அந்த இடத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மக்கள் விரட்டும் வேட்பாளர்கள்: பல இடங்களில் வேட்பாளர்கள் பொதுமக்களால் விரட்டப்படுவது குறித்துப் பேசுகையில், குறுகிய காலத்திற்கு முன்பு பதவியை ராஜினாமா செய்துவிட்டு எதற்காக மீண்டும் அதே பதவிக்கு ஓடோடி வருகிறார்கள் என்கிற கோபமே பொதுமக்களின் இந்த எதிர்ப்புக்குக் காரணம் என்று அவர் தெரிவித்தார்.
தவெக மீது மறைமுக விமர்சனம்: டெண்டர் விடுவதற்கும் வேலை பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டிய அவர், கம்யூனிஸ்ட் கட்சியில் எத்தகைய கடினமான பணிகளையும் தாங்களே செய்யக்கூடிய தோழர்கள் இருக்கிறார்கள் என மேடையில் தவெகவை மறைமுகமாக விமர்சித்தார்.
