2026-27 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நவீன சைக்கிள்கள் வழங்கும் திட்டத்திற்காக, ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு தமிழக அரசு ஒப்பந்த ஆணை வழங்கியுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் எம். பிரதீப் குமார், இ.ஆ.ப., கடந்த நவம்பர் 20, 2026 அன்று பிறப்பித்த செயல்முறை ஆணையின்படி இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. சைக்கிள்களுடன் ஹெல்மெட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட கூடுதல் உபகரணங்களும் வழங்கப்பட உள்ளன.
5.32 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்:
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மொத்தம் 5,32,388 மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர். இதில் 2,37,133 மாணவர்களும், 2,95,255 மாணவிகளும் அடங்குவர்.
மாணவர்களுக்கு ஆர்மி கிரீன்; மாணவிகளுக்கு லைலாக் மிஸ்ட்:
மாணவர்களுக்கு ‘ஆர்மி கிரீன்’ நிறத்திலும், மாணவிகளுக்கு ‘லைலாக் மிஸ்ட்’ எனப்படும் இளஞ்சிவப்பு கலந்த ஊதா நிறத்திலும் நவீன வடிவமைப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. மாணவிகளுக்கான சைக்கிள்களில் முன்பக்கக் கூடையும் இடம்பெறும்.
மேலும், ஒவ்வொரு சைக்கிளுடனும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு IS 18808:2025 தரச்சான்று பெற்ற ஹெல்மெட் மற்றும் 750 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ளன.
சைக்கிள்களுக்கு 5 ஆண்டுகள் வரை வாரண்டி:
சைக்கிள்களின் பிரேம், போர்க் மற்றும் ஹேண்டில்பார் ஆகியவற்றுக்கு 5 ஆண்டுகள் உத்தரவாதம் வழங்க வேண்டும் என ஒப்பந்தத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதர பாகங்களுக்கு 2 ஆண்டுகளும், சைக்கிளுடன் வழங்கப்படும் ஹெல்மெட்டுக்கு ஓராண்டும் வாரண்டி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் விலை குறைப்பு:
ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் ஆரம்பத்தில் மாணவர்களுக்கான சைக்கிள் தொகுப்புக்கு ரூ.7,235.10-ம், மாணவிகளுக்கான சைக்கிள் தொகுப்புக்கு ரூ.7,476.60-ம் விலை கோரியிருந்தது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைச் செயலாளர் தலைமையிலான 11 பேர் கொண்ட கொள்முதல் குழு, நிறுவனத்துடன் 9 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் முடிவில் மாணவர்களுக்கான சைக்கிள் தொகுப்பு ரூ.5,260-க்கும், மாணவிகளுக்கான தொகுப்பு ரூ.5,130-க்கும் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆரம்பத்தில் கோரப்பட்ட விலையைக் காட்டிலும் கொள்முதல் செலவு குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
150 நாட்களுக்குள் விநியோகம் செய்ய உத்தரவு:
ஒப்பந்த ஆணை வழங்கப்பட்ட நாளிலிருந்து 150 நாட்களுக்குள் சைக்கிள்கள் மற்றும் அவற்றுடன் வழங்கப்பட வேண்டிய உபகரணங்களை முழுமையாக விநியோகம் செய்ய வேண்டும் என நிறுவனத்திற்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சைக்கிள்களைப் பராமரிக்கவும் பழுதுபார்க்கவும் வசதியாக தமிழகம் முழுவதும் சுமார் 4,500 பள்ளிகளுக்கு பழுதுபார்க்கும் உபகரணப் பெட்டிகளும் வழங்கப்பட உள்ளன.
