Homeசெய்திகள்தமிழ்நாடுமேட்டூர் அணையில் இருந்து தினமும் 3,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் – அர....

மேட்டூர் அணையில் இருந்து தினமும் 3,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் – அர. சக்கரபாணி கோரிக்கை!

-

- Advertisement -

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய, மேட்டூர் அணையில் இருந்து தினமும் 3,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று முன்னாள் உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரூ.25 கோடியில் கட்டப்பட்ட கல்லூரியில் ஆய்வு:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுமார் ரூ.25 கோடி மதிப்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ள இந்தக் கல்லூரியில் மாணவிகளுக்காகப் புதிய விடுதியும், ஆடிட்டோரியமும் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி புதிதாகக் கட்டப்பட்ட கல்லூரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, கட்டப்பட உள்ள மாணவிகள் விடுதி மற்றும் ஆடிட்டோரியத்தின் வரைபடங்களையும் பார்வையிட்டார்.

இதையடுத்து, ஒட்டன்சத்திரம் கலைஞர் நூற்றாண்டு வணிக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மேற்கூரைப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணையில் இருந்து 3,000 கன அடி தண்ணீர் திறக்க கோரிக்கை:

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர. சக்கரபாணி, காவிரி ஆற்றில் இருந்து செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து தினமும் 1,000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுவதால், கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்குத் தேவையான அளவு தண்ணீரை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே, குடிநீர் விநியோகம் சீராக நடைபெறுவதற்கு மேட்டூர் அணையில் இருந்து தினமும் 3,000 கன அடி தண்ணீர் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இடத்தில் நீரைச் சேமித்து வைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்தப் பணிகளை முடிக்க மேலும் ரூ.165 கோடி தேவைப்படுவதாகவும் கூறினார். தமிழக அரசு அந்த நிதியை வழங்கினால் தென்மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்தார்.

திண்டுக்கல்லை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை:

திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரின்றி கருகியுள்ளதாக அர. சக்கரபாணி தெரிவித்தார்.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பரப்பலாறு அணையைத் தூர்வார வேண்டும்:

ஒட்டன்சத்திரம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பரப்பலாறு அணையைத் தூர்வாரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேட்டூர் அணை தாமதத் திறப்பு: டெல்டா விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை!

MUST READ