கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகாரில், தமிழக அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தது முன்பே தெரியாதா?
இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் மாவட்ட ஆட்சியரின் புகாரே பதிவு செய்யப்படும் என்றால், தமிழ்நாட்டில் நடைபெறுவது ஆட்சியா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அரசின் நடவடிக்கையைச் சாடிய ஸ்டாலின்
மேலும், சமூக வலைதளத்தில் பதிவிடாத கருத்துக்காக ஒருவரின் முகவரியைக் கண்டறிந்து அதிகாலையில் கைது செய்யும் காவல்துறையால், புகாரில் சிக்கியுள்ள சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்ய முடியவில்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மைதானத்தில் போதை மாத்திரையை நசுக்கியதாகக் கூறப்படும் அமைச்சர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், கட்சியில் உள்ள மற்றவர்களுக்கும் அச்சம் ஏற்பட்டிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தவறு செய்தாலும் கட்சி தங்களைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தையும், புகார் அளிக்கும் பெண்களே கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற தவறான முன்னுதாரணத்தையும் முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிக்கை
பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது பெண்கள் த.வெ.க.வினரின் தொல்லைகளில் இருந்து பாதுகாப்புத் தேடி ஓடும் நிலையை ஏற்படுத்திவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த வழக்கில் உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நான்கு மாதங்களாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரைப் பாதுகாக்க மாநில அரசு முயற்சித்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், இனி மாநில அரசே இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது என்பதால், வழக்கைத் தாமாகவே சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை கோரிக்கை
சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்னரும் நடவடிக்கை எடுக்காமல் மறைத்ததாகக் கூறப்படும் தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்படும் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரியுள்ளார்.
இறுதியாக, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
