பெரியாரின் ‘குடிஅரசு’ இதழ் முழுத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தையும் அதன் தலைமையிலான ஆட்சியையும் கடுமையாக விமர்சித்தார்.

“பெரியாரையும் அம்பேத்கரையும் ஃபேஷனுக்காக மட்டுமே கொள்கைத் தலைவர்களாக வைத்துள்ளனர். ஆனால், இந்த ஆட்சிக்கு ஒரு ஜோசியர்தான் கொள்கைத் தலைவராகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார்” என்று அவர் விமர்சித்தார்.
‘குடிஅரசு’ வெளியீடு வரலாற்றுச் சிறப்பு மிக்கதுஊ
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தொகுக்கப்பட்ட பெரியாரின் ‘குடிஅரசு’ இதழ்களின் முழுத் தொகுப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
விழாவில் பேசிய அவர், பெரியாரின் கருத்துகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முக்கியமான ஆவணமாக இந்த நூல் தொகுப்பு அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
“பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் பணியாற்றிய இதழ் ‘குடிஅரசு’. தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றிய இதழ். பகுத்தறிவுக் கண்ணைத் திறந்த இதழ். இன்றைய ஆதிக்கத்துக்கு எதிரான எச்சரிக்கையாக இந்தத் தொகுப்பு வெளியாகியுள்ளது” என்று பெருமிதம் தெரிவித்தார்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் எழுதியவை வெறும் எழுத்துகள் அல்ல; தமிழகத்தின் பாதையை மாற்றிய சிந்தனைகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தடைகளைத் தாண்டிய பெரியாரின் கொள்கைப் பயணம்:
‘குடிஅரசு’ இதழ் தடை செய்யப்பட்டபோது, பெரியார் ‘புரட்சி’ என்ற பெயரில் இதழைத் தொடர்ந்து நடத்தினார். அதற்கும் தடை ஏற்பட்டபோது ‘பகுத்தறிவு’ என்ற பெயரில் தனது அறிவுப் பணியைத் தொடர்ந்தார் என்று ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.
இதழின் பெயரை மாற்றினாரே தவிர, தனது கொள்கையைப் பெரியார் ஒருபோதும் மாற்றிக்கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சாதிய ஏற்றத்தாழ்வு, மதவாதம், பெண்ணடிமைத்தனம், பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராகப் பெரியார் ஏந்திய அறிவாயுதம்தான் ‘குடிஅரசு’ இதழ் என்றும் பேசினார்.
ஜோசியர்தான் இந்த ஆட்சிக்கு வழிகாட்டி!”:
தற்போதைய தமிழக ஆட்சியை நேரடியாக விமர்சித்த ஸ்டாலின், ஆளும் தரப்பினர் பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவர்களாகக் கூறிக்கொள்வதாகவும், ஆனால் அவர்களின் கொள்கைகளுக்கு எதிராகவே செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
“மூடநம்பிக்கையில் மூழ்கிப்போனவர்கள், ஃபேஷனுக்காக மட்டுமே பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவர்களாக வைத்துக்கொண்டுள்ளனர். இந்த ஆட்சிக்கு ஒரு ஜோசியர்தான் கொள்கைத் தலைவராகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார்” என்று விமர்சித்தார்.
பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்வதற்கும், நடைமுறையில் அவற்றைப் பின்பற்றுவதற்கும் இடையே வேறுபாடு இருப்பதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
:ஆறே மாதத்தில் எல்லாம் நாசம்:
தவெக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய ஸ்டாலின், ஆட்சியில் நிலையான கொள்கை முடிவுகள் இல்லை என்றும், அறிவிக்கப்படும் திட்டங்கள் எதிர்ப்பு எழுந்தவுடன் திரும்பப் பெறப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
தொழில்துறைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ‘கைடன்ஸ்’ அமைப்பே வழிகாட்ட முடியாத நிலையில் இருப்பதாகவும் விமர்சித்தார்.
மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையே போட்டி நிலவுவதாக முன்பு கூறியிருந்ததாகவும், பின்னர் போதைப்பொருள் பிரச்சினைக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் இடையே போட்டி என்று சொல்லும் நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது அரசாங்கத்தின் உயர் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளுக்குத் தொல்லை கொடுப்பதில் அமைச்சர்களுக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் இடையே போட்டி நிலவுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
விலைவாசி உயர்வு :
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், வெங்காயம், தக்காளி வாங்குவதற்குக்கூட மக்கள் சிரமப்படுவதாகக் கூறினார்.
அரிசி விலையைக் கேட்டாலே மயக்கம் வருவதாகவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலமைச்சர் பேசுகிறாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், சட்டம் – ஒழுங்கு, போதைப்பொருள் கடத்தல், பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார்.
மாநில உரிமைகள் குறித்துக் கேள்வி:
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாட்டைக் கண்டிக்க தமிழக அரசு முன்வரவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தின் மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவைக் கலைத்தது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் விமர்சித்தார்.
தனது உரையின் இறுதியில், பெரியார் ஏந்திய பகுத்தறிவு மற்றும் சமூகநீதிக் கொள்கைகளை அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தவெகவை அரசியல் களத்தில் எதிர்ப்பதுடன், அதன் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று கருஞ்சட்டைப் படையினருக்கு அழைப்பு விடுத்தார்.
“தமிழா, விழிப்புணர்வு கொள்; இனஉணர்வு கொள்” என்று பெரியாரின் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.
பெரியாரின் ‘குடிஅரசு’ இதழ் தொகுப்பு வெளியீட்டு விழா, நூல் வெளியீட்டு நிகழ்வாக மட்டுமின்றி, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்த திமுகவின் கடுமையான விமர்சன மேடையாகவும் அமைந்தது.
