திருச்சி மாவட்டம், துறையூர் – முசிறி சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வேப்பமரத்தில் மோதிய விபத்தில், செங்கல் சூளை தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காதுகுத்து விழாவுக்குச் சென்ற தொழிலாளர்கள்:
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் உள்ள செங்கல் சூளையில் 10 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் அனைவரும் நவம்பர் 22-ஆம் தேதி காலை, நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியில் நடைபெற்ற நண்பர் வீட்டு காது குத்து விழாவில் பங்கேற்பதற்காகக் காரில் சென்றுள்ளனர்.
விழா முடிந்ததும், அனைவரும் அதே காரில் தங்களது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திருச்சி மாவட்டம், துறையூர் – முசிறி சாலையில் ஜெம்புநாதபுரம், போதுர்பட்டி நால்ரோடு அருகே சென்றபோது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வேப்பமரத்தில் மோதியது.
8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு:
இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்களில் 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் தஞ்சாவூர் மாவட்டம், மகாராஜபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் (42), சங்கிலி (44), முருகன் (42), ராஜேஷ் (43), சக்திவேல் (42), சுப்பிரமணி (45) ஆகியோரும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாவாடை (50), சீதாராமன் ஆகியோரும் அடங்குவர்.
விபத்தில் காயமடைந்த ராமலிங்கம், ராமர் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிவேகமே காரணமா? போலீஸ் விசாரணை:
காரின் அதிவேகமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து ஜெம்புநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே பகுதியில் பணியாற்றிய தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களுடன் நாளை ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் விஜய்!
