இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, இன்று (நவம்பர் 23) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

நேபாள பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் பாலேந்திர ஷா மேற்கொள்ளும் முதல் இரு தரப்பு வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ள அவருக்கு, டெல்லி விமான நிலையத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா வரவேற்பு அளித்தார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் பாலேந்திர ஷாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், போக்குவரத்து, எரிசக்தி, கல்வி, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இன்று பிரதமர் மோடியுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு, வர்த்தகம், போக்குவரத்து இணைப்பு, ரயில்வே மற்றும் எரிசக்தித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
மேலும், இந்தியா – நேபாளம் இடையிலான நீண்டகாலக் கூட்டுறவை வலுப்படுத்தும் வகையில், ‘வளமான நேபாளம் – வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற தொலைநோக்குத் திட்ட ஆவணமும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறை சார்ந்த சில திட்டங்களைத் தொடங்கி வைப்பது, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இந்தப் பயணத்தில் இடம்பெற உள்ளன.
இந்தச் சந்திப்பு மூலம் இந்தியா – நேபாளம் இடையிலான பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு ஒத்துழைப்பில் புதிய முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மொழிப் பன்முகத்தன்மை வியக்க வைக்கிறது! – ரஷ்ய அதிபர் புதின்
