HomeBreaking Newsஅரசின் கடன்களைக் குறைத்துக் காட்ட நெல் கொள்முதலைக் கைவிடுவதா? – டான்பெட்டிடம் ஒப்படைக்கக் கூடாது: அன்புமணி...

அரசின் கடன்களைக் குறைத்துக் காட்ட நெல் கொள்முதலைக் கைவிடுவதா? – டான்பெட்டிடம் ஒப்படைக்கக் கூடாது: அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

-

- Advertisement -

தமிழ்நாடு அரசின் நேரடிக் கடன் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டும் சூழலைச் சமாளிப்பதற்காக, விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பொறுப்பைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து கூட்டுறவு அமைப்புகளுக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த முடிவைக் கைவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அரசின் கடன்களைக் குறைத்துக் காட்ட நெல் கொள்முதலைக் கைவிடுவதா? – டான்பெட்டிடம் ஒப்படைக்கக் கூடாது: அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

நெல் கொள்முதல் பணியைத் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையமான டான்பெட்டிடம் ஒப்படைத்தால், தற்போதுள்ள கொள்முதல் கட்டமைப்பு சிதைவதுடன் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 1973ஆம் ஆண்டு முதல் காவிரி பாசன மாவட்டங்களிலும், 2002ஆம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் பரவலாகவும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தப் பொறுப்பை விரைவில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் டான்பெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் நேரடிக் கடன் அதிகரித்து வரும் நிலையில், கடன் சுமையை அரசிடமிருந்து கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நோக்கத்திலேயே இந்த முடிவு எடுக்கப்படுவதாகக் கூறப்படுவது அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நிதிப் பொறுப்புடமை மற்றும் நிதிநிலை மேலாண்மைச் சட்டத்தின்படி, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3 விழுக்காட்டைத் தாண்டி ஓராண்டில் நேரடிக் கடன் பெற முடியாது என்றும், 2026-27ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.40.67 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளதால், கடன் வரம்பு ரூ.1.21 லட்சம் கோடியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதைத் தாண்டி கடன் பெற வேண்டிய சூழலில், நெல் கொள்முதலுக்குத் தேவைப்படும் சுமார் ரூ.11,000 கோடியை கூட்டுறவு அமைப்புகள் மூலம் கடனாகப் பெற அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

நெல் கொள்முதல் மத்திய அரசுக்காகவே தமிழக அரசால் மேற்கொள்ளப்படுவதாகவும், கொள்முதல் விலை மற்றும் கையாளுதல் செலவு உள்ளிட்ட தொகைகளை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்குவதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்தத் தொகை கிடைக்க குறைந்தது 18 மாதங்கள் ஆகும் என்பதால், இடைக்காலத் தேவைக்காகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடன் பெற வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், நெல் கொள்முதல் பொறுப்பை டான்பெட்டிடம் ஒப்படைத்து அதன் மூலம் கடன் பெற அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மத்திய அரசின் தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்திடம் ரூ.10,000 கோடி கடன் கோரி டான்பெட் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டான்பெட் நிறுவனம் மூலம் கிராமப்புற தொடக்கக் கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக நெல் கொள்முதல் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலாளர் அமுதா தெரிவித்திருப்பதும் அரசின் முடிவை உறுதிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்தாலும், டான்பெட் நிறுவனம் கொள்முதல் செய்தாலும் ஒன்றுதான் என்று தோன்றலாம்.

ஆனால், இரு அமைப்புகளுக்கும் இடையே கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனில் பெரும் வேறுபாடு இருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். டான்பெட் நிறுவனம் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை வெளிச்சந்தையில் கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் விநியோகிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

ஆண்டுக்கு சுமார் 4.50 லட்சம் டன் உரங்களைக் கொள்முதல் செய்து விநியோகிக்கும் பணியை மட்டுமே மேற்கொண்டு வரும் அந்த அமைப்பிடம், ஆண்டுக்கு 60 லட்சம் டன் நெல்லைக் கொள்முதல் செய்வதற்குத் தேவையான கட்டமைப்புகளும் மனிதவளமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், டான்பெட் உள்ளிட்ட கூட்டுறவு அமைப்புகளின் நிதிநிலை ஏற்கெனவே மோசமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவற்றின் நிதிச்சுமை மேலும் அதிகரித்தால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான பணத்தை உரிய நேரத்தில் வழங்க முடியாத நிலை ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

இதனால் ஒரு கட்டத்தில் நெல் கொள்முதல் பணியே முடங்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நெல் கொள்முதலுக்காகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பெற்ற கடனையும் சேர்த்தே மாநிலத்தின் மொத்த நேரடிக் கடன் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருந்து வந்ததாகவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அரசின் பிற தேவைகளுக்காகப் பெறப்படும் கடன்கள் அதிகரித்திருப்பதே நேரடிக் கடன் அளவு 3 விழுக்காட்டைத் தாண்டுவதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, கடன் அளவைக் கட்டுப்படுத்த அரசு தனது பிற செலவுகளையும் கடன் தேவைகளையும் குறைக்க வேண்டுமே தவிர, விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் நேரடி நெல் கொள்முதல் பொறுப்பை மாற்றக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசு தனது கடன் தேவைகளைக் கட்டுப்படுத்துவதுடன், விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பணியைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமே தொடர்ந்து மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

MUST READ