HomeBreaking Newsதிண்டிவனம் கோர விபத்து: பேருந்து மோதி 2 பேர் பலி!

திண்டிவனம் கோர விபத்து: பேருந்து மோதி 2 பேர் பலி!

-

- Advertisement -

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மற்றும் சபரிமலை பக்தர்கள் சென்ற வேன் மீது தனியார் பேருந்து அடுத்தடுத்து மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர், பக்தர் என இருவர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்தால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீட்டருக்கும் மேலாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அடுத்தடுத்து மோதிய பேருந்து:

சிவகாசியில் இருந்து பார்சல்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, சாலையின் இடதுபுற ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்து, அந்த லாரியின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அதே பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீதும் பேருந்து மோதியது. அந்த வேனில் சபரிமலைக்குச் சென்று விட்டு திரும்பிய 14 பக்தர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் வருதாபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

இருவர் சம்பவ இடத்திலேயே பலி:

இந்த விபத்தில் வேன் ஓட்டுநரும், வேனில் பயணம் செய்த சபரிமலை பக்தர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வேனில் இருந்த பல பக்தர்கள் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

5 கி.மீட்டருக்கு மேல் போக்குவரத்து நெரிசல்:

இந்த விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கி.மீட்டருக்கும் மேலாகக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

மயிலம் போலீஸார் விசாரணை:

விபத்து குறித்து மயிலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

திமுக தயவில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி முயன்றார்; கட்சியை ஒன்றிணைக்காவிட்டால் அவருக்கே ஏமாற்றம் ஏற்படும் – நத்தம் விஸ்வநாதன் பரபரப்பு பேட்டி!

MUST READ