அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் ஆதரவுடன் முதலமைச்சராக முயற்சி செய்ததாக அதிமுக மூத்த தலைவர் நத்தம் விஸ்வநாதன் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்காவிட்டால், எடப்பாடி பழனிசாமிக்கே அரசியல் ரீதியாக ஏமாற்றம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த 47 அதிமுக எம்எல்ஏக்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியதாகவும், அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்ததாகவும் நத்தம் விஸ்வநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், கட்சிக்குள் அதிருப்தி நீடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டி.டி.வி. தினகரன், சசிகலா உள்ளிட்ட கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் நத்தம் விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு ஒன்றிணைக்கத் தவறினால், வரவிருக்கும் ஆறு இடைத்தேர்தல்களுக்குப் பிறகு அதிமுகவில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, முதலமைச்சர் விஜய்க்கு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் தனது பேட்டியில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கட்சியை ஒன்றிணைத்து நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தக்கவைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அவரே சந்திக்க நேரிடும் என்றும் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
