கோவையில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி வைத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்தபோது பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு இரங்கல் நிகழ்ச்சியில் அமைச்சர் விஜய் பார்த்திபனைத் திட்டியதாகப் பரவிய தகவல் குறித்த கேள்விக்கு, “விஜய் பார்த்திபனா? அவர் அமைச்சரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார். மேலும், செய்தியாளர்கள் திமுகவின் ஏஜென்டுகளாகத் திட்டமிட்டு கேள்வி கேட்பதாகக் குற்றம்சாட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை டாடாபாத் பகுதியில் ‘தேன் சிட்டு’ என்ற அமைப்பு சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை வைகோ தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க வந்தனர். எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்திற்கு வருவதால், அங்கு சென்று செய்தி சேகரிக்கலாம் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் செய்தியாளர்கள் இங்கு வந்திருப்பதாகவும் கூறிய வைகோ, எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதலமைச்சர், அவர் ஒரு ஞானி, தாம் சிறிய ஆள் எனக் குறிப்பிட்டு முதலில் பேட்டி அளிக்க மறுத்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களைத் தன்னைவிட அதிகமாக மதிப்பவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை என்றும், எரிச்சலூட்டும் கேள்விகளைக் கேட்டால்கூடப் பொறுமையாகப் பதிலளிப்பவன் தான் என்றும் தெரிவித்தார்.
வடிவேலு பட்டம் எனக்குப் பெருமைதான் – மல்லை சத்யாவுக்கு பதில்
தன்னை விமர்சித்து மல்லை சத்யா பேசியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த வைகோ, கட்சியில் இருந்த ஒருவரை ஐந்து முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடச் செய்து, அவருக்காகப் பெரும் தொகையைச் செலவழித்ததுடன், மாநில இளைஞரணிச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வழங்கியதாகக் கூறினார்.
ஆனால், அவர் தனக்கு ‘திமுகவில் வடிவேலு’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட வைகோ, பலர் தனக்குப் பல பட்டங்களை வழங்கியிருந்தாலும் இவ்வளவு சிறப்பான பட்டம் கிடைத்ததில்லை என்றும், அதனால் அவரது கருத்துக்குப் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், வடிவேலு ஒரு தமிழர் என்றும், ஒரு காலத்தில் அவரது படம் இல்லாமல் திரைப்படங்கள் ஓடாத நிலை இருந்ததாகவும் கூறினார்.
திமுகவினர் அவரைத் தங்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய வைத்துவிட்டு, பின்னர் அவருக்கு வாய்ப்புகள் இல்லாத நிலையை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டினார். வடிவேலுவின் வாழ்க்கையைச் சீரழித்தவர்கள் திமுகவினர்தான் என்றும், அவரை நம்ப வைத்து பயன்படுத்திவிட்டுக் கைவிட்டதைப் போலவே தன்னையும் செய்துவிட்டதாகவும் வைகோ விமர்சித்தார்.
முதலமைச்சருக்குப் பாதுகாப்பாகத்தான் சென்றேன் – விஜய் பார்த்திபன் விவகாரத்தில் விளக்கம்
மறைந்த வி.எஸ். பாபு இரங்கல் நிகழ்ச்சியில் அமைச்சர் விஜய் பார்த்திபனை வைகோ திட்டியதாகப் பரவிய தகவல் குறித்த கேள்விக்கு, “விஜய் பார்த்திபனா? அவர் அமைச்சரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்.
முதலமைச்சரை அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, அவருக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உடன் சென்றதாகவும், அப்போது ஒருவர் தன்னைப் பின்னால் இழுத்ததால், “உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ” என்று கூறியதாகவும் விளக்கமளித்தார்.
கலைஞருக்கே பாதுகாப்பு அளித்தவன் நான். முதலமைச்சருக்கு ஒரு துரும்புகூட விழக்கூடாது என்றுதான் அவரை அழைத்துச் சென்றேன். வாஜ்பாய், கலைஞர், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கும் பாதுகாப்பாக இருந்துள்ளேன்.
இதில் என்ன தவறு இருக்கிறது? யாரையும் நான் திட்டவில்லை என்றார். முதலமைச்சர் தன்னை உடன் அழைத்துச் சென்றதைச் சகித்துக்கொள்ள முடியாத திமுகவினர் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
செய்தியாளர்களிடம் வாக்குவாதம் – திமுக ஏஜென்டுகள் என விமர்சனம்
அமைச்சரை நோக்கி வைகோ கைநீட்டிப் பேசியது சர்ச்சையானது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது குறுக்கிட்டுப் பேசுவாயா? என ஒருமையில் கேட்ட வைகோ ஆவேசமடைந்தார்.
இதற்குச் செய்தியாளர்கள், பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்கும் ஒரு முறை உள்ளது என்று கூறினர். அதற்கு, தன்னைவிடப் பத்திரிகையாளர்களை மதிப்பவர்கள் யாரும் கிடையாது என வைகோ பதிலளித்தார்.
தொடர்ந்து, “Press Planned Prepared Question by DMK” என்று குறிப்பிட்ட அவர், செய்தியாளர்கள் திட்டமிட்டு திமுகவின் ஏஜென்டுகளாக வந்து கேள்வி கேட்பதாகவும், திமுகவால் நூற்றுக்கு நூறு குடம் போட்டு எடுக்கப்பட்ட ஏஜென்டுகள் என்றும் விமர்சித்தார்.
திமுகவை வளர்த்தவன் நான்; திமுகவுக்காக 25 முறை சிறைக்குச் சென்றவன்; உயிரையே கொடுத்தவன். திமுகவின் வரலாறு செய்தியாளர்களுக்குத் தெரியாது என்றும் கூறினார். திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டதாகவும், தங்களை அவமானப்படுத்தியதால் கூட்டணியிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவித்தார்.
கட்சிகளே இல்லாத கட்சிகளுக்கெல்லாம் அதிக தொகுதிகள் வழங்கப்பட்டதாகவும் விமர்சித்தார்.
திருப்பரங்குன்றம் தீபத் தீர்ப்பு மனதைப் புண்படுத்தியது – வைகோ கருத்து
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்த கேள்விக்குப் பதிலளித்த வைகோ, அந்தத் தீர்ப்பு தனது மனதை மிகவும் காயப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமிய சகோதரர்களின் தர்கா அமைந்துள்ள நிலையில், பல ஆண்டுகளாக இல்லாத வகையில் சமூக ஒற்றுமை குறித்த சிந்தனை இல்லாமல் இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும், இது சிறுபான்மை மக்களின் மனதைப் புண்படுத்தும் செயல் என்றும் கூறினார். தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமா என்ற கேள்விக்கு, மேல்முறையீடு செய்ய வேண்டிய நேரத்தில் செய்வார்கள் எனப் பதிலளித்தார்.
சட்டம் – ஒழுங்கு விவகாரத்தில் விவாதிக்கத் தயார்
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு குறித்துப் பேசிய வைகோ, 1991ஆம் ஆண்டு முதல் தற்போதைய ஆட்சி வரையிலான கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, என்கவுன்டர் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்பான தரவுகளைத் தொகுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அந்தத் தகவல்களை அனைத்து செய்தி நிறுவனங்களுக்கும், அரசு துறைகளுக்கும் வழங்கியுள்ளதாகக் கூறிய அவர், எந்த ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டது என்பது குறித்து எந்த மேடையிலும் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தன்னுடன் விவாதிக்க வரலாம் என்றும் சவால் விடுத்தார்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 16 பேர் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டிய வைகோ, காவல்துறையைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட அந்தப் படுகொலை மன்னிக்க முடியாத குற்றம் என்றும் விமர்சித்தார்.
எங்கள் கட்சியை யாராலும் கரைக்க முடியாது
மதிமுகவை திமுகவினர் கரைத்துவிடுவார்கள் என்று கூறப்படுவது குறித்த கேள்விக்கு, தங்கள் கட்சியை யாராலும் கரைக்க முடியாது என்று வைகோ பதிலளித்தார்.
எம்ஜிஆரைத் தவிர, விஜயைத் தவிர, தங்கள் கட்சியை ஒழிக்க வேண்டும் என்று கலைஞர் தலைகீழாக நின்றதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் கூறினார். இனியும் அது நடக்காது; மதிமுக மேலும் எழுச்சி பெறும் என்றும் தெரிவித்தார்.
முதலீடுகள் ஆந்திராவுக்குச் செல்கிறதா? அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் செல்வதாக எழும் குற்றச்சாட்டுகளை மறுத்த வைகோ, ஸ்டாலின் ஆட்சியிலும் கருணாநிதி ஆட்சியிலும் இதைவிட அதிக முதலீடுகள் வெளியே சென்றுள்ளதாகக் கூறினார்.
மேலும், சில அரசு அதிகாரிகள் தற்போதைய அரசுக்கு ஒத்துழைக்காமல் அரசை ஸ்தம்பிக்க வைக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.
பல்வேறு துறைகளில் வழக்கமாக நடைபெற்று வந்த பணப் பரிவர்த்தனைகள் தடைப்பட்டதால் அதிருப்தியில் உள்ள அதிகாரிகள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் முதலமைச்சரைச் சந்திக்க விரும்பியபோதும், முதலமைச்சர் அதனை ஏற்கவில்லை என்று குறிப்பிட்ட வைகோ, இதைவிட விஜயின் நேர்மைக்கு வேறு என்ன சான்று வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை
மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டிய அவசியமில்லை என்றும், இதற்காக உரிய முறையில் போராடுவோம் என்றும் வைகோ தெரிவித்தார்.
தமிழ்நாட்டைப் பாதுகாக்கத் தன்னைப்போல் போராடிய தலைவர்கள் யாராவது இருந்தால் கூறுங்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், மேகதாது அணைக்கு எதிராக ஊர் ஊராகச் சென்றதாகவும், இந்த விவகாரத்தில் முதலில் போராட்டம் நடத்தியது தங்கள் கட்சிதான் என்றும் கூறினார்.
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையை தவெகவினர் தாங்களாகவே திறந்தது குறித்த கேள்விக்கு, அங்கு தண்ணீர் தேவை இருந்திருக்கும் என்றும், அதிகாரிகள் வராததால் விவசாயிகளைக் காப்பாற்றும் நோக்கில் உள்ளூர் விவசாயிகள் அணையைத் திறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். அதில் தவறில்லை என்றும் கூறினார்.
அண்ணாமலை எழுப்பிய லாக்-அப் மரணங்கள் குறித்த குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு, “அவர் நன்றாக இருக்கட்டும்; அவரைப் பற்றி நான் பேச விரும்பவில்லை” என்று பதிலளித்தார்.
இறுதியாக, தன்னைப் பற்றிய விமர்சனங்களைக் கவலைப்படுவதில்லை என்றும், தனது அரசியல் வாழ்க்கையில் ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்டு கடந்து வந்துள்ளதாகவும் கூறிய வைகோ, “என்னைப் பற்றி விமர்சனமாகப் போட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? போட்டுக்கொள்ளுங்கள். I don’t care” என்றார்.
பிளாஸ்டிக் ஒழிப்பு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி வைக்க வந்த இடத்தில், அரசியல் விவகாரங்கள், கூட்டணி விமர்சனங்கள், மல்லை சத்யா விவகாரம், திருப்பரங்குன்றம் தீபத் தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் தொடர்பாக வைகோ செய்தியாளர்களுடன் நடத்திய காரசாரமான உரையாடல் கோவையில் கவனத்தைப் பெற்றது.
