Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் இரண்டே இரண்டுக்குத்தான் போட்டி; ஒன்று விஜயின் நடிப்பு, மற்றொன்று எடப்பாடி பழனிசாமியின் உழைப்பு –...

தமிழ்நாட்டில் இரண்டே இரண்டுக்குத்தான் போட்டி; ஒன்று விஜயின் நடிப்பு, மற்றொன்று எடப்பாடி பழனிசாமியின் உழைப்பு – தருமபுரியில் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் இரண்டே இரண்டுக்குத்தான் போட்டி. ஒன்று விஜயின் நடிப்பு; மற்றொன்று எடப்பாடி பழனிசாமியின் உழைப்பு” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.தமிழ்நாட்டில் இரண்டே இரண்டுக்குத்தான் போட்டி; ஒன்று விஜயின் நடிப்பு, மற்றொன்று எடப்பாடி பழனிசாமியின் உழைப்பு – தருமபுரியில் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!

தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களாகியும், முதலமைச்சர் விஜயின் அனுபவமின்மையால் தமிழ்நாடு ஆறு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

மாநிலத்தில் கொலைச் சம்பவங்கள், காவல் நிலைய மரணங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், ஆட்சிக்கு வந்தால் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பேன், பெண்களுக்கு எதிரான குற்றங்களை முழுமையாகத் தடுப்பேன் என முன்பு விஜய் கூறியதாகச் சுட்டிக்காட்டினார்.

அப்போது முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த விஜய், தற்போது நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்காமல் அவற்றை நியாயப்படுத்துவதாகவும் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டினார்.

தற்போதைய அமைச்சர்கள், முதலமைச்சர், அவரது ஆலோசகர்கள் மற்றும் நிழல் முதலமைச்சர் எனக் குறிப்பிடப்படுபவர்களுக்கும் போதிய அனுபவம் இல்லை என்று விமர்சித்த அவர், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், மாநில காவல்துறையால் பிடிக்கப்பட வேண்டிய கடத்தல் சம்பவங்களை மத்திய குற்றப்பிரிவினர் கண்டுபிடிப்பதாகவும் தெரிவித்தார். இதனால் மாநில அரசுக்கு நிலைமை குறித்துத் தெரியவில்லை என்றும், அரசு தூங்கிக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.

மின்சாரக் கொள்முதல் தொடர்பாகப் பேசிய அவர், 13 ரூபாய்க்குக் கிடைக்கும் மின்சாரத்தை 43 ரூபாய்க்கு வாங்குவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், மின்வெட்டு எப்போது ஏற்படும் என்றே தெரியாத நிலை உள்ளதாகவும், விலைவாசி உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுவாக எந்தவொரு புதிய ஆட்சிக்கும் ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று கூறப்படும் நிலையில், தற்போதைய ஆட்சியில் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், “தமிழ்நாட்டில் இரண்டே இரண்டுக்குத்தான் போட்டி; ஒன்று விஜயின் நடிப்பு, மற்றொன்று எடப்பாடி பழனிசாமியின் உழைப்பு” என்று கூறினார்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்துப் பேசிய ஆர்.பி. உதயகுமார், நீதிமன்றத் தீர்ப்பை முந்தைய திமுக அரசு செயல்படுத்தவில்லை என்றும், தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், அதையாவது தற்போதைய அரசு செயல்படுத்தும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற சோனியா காந்தி தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், காங்கிரஸ் முதலமைச்சர்களைக் காட்டிலும் விஜய்க்கு முன்வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி காவிரி நீர் பிரச்சினை குறித்து விஜய் சோனியா காந்தியிடம் பேசியிருக்கலாம் என்றார்.

கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரிடம் பேசுமாறு சோனியா காந்தியிடம் விஜய் வலியுறுத்தியிருக்கலாம் என்றும், ஆனால் டெல்லிக்குச் சென்றுவிட்டு எதையும் பேசாமல் திரும்பிவிட்டதாகவும் விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் காங்கிரஸ், சிவக்குமார் காங்கிரஸ், தாகூர் காங்கிரஸ் எனப் பல பிரிவுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தவெகவுக்கு ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 உறுப்பினர்களின் பெரும்பான்மை இல்லை என்றும், கூட்டணிக் கட்சிகளுடனும் தற்போது நல்ல சூழல் இல்லை என்றும் தெரிவித்த ஆர்.பி. உதயகுமார், இதனால் காங்கிரஸ் மற்றும் மத்திய அரசின் உதவியை நாடுவதற்காகவே டெல்லி சென்றுள்ளதாக விமர்சித்தார்.

இறுதியாக, தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலைமை கற்காலத்தை நோக்கிச் சென்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

விஜய்யைப் பார்க்கச் சென்றவர்களுக்கு ரூ.20 லட்சம்; வாழ்வாதாரத்திற்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு ரூ.7 லட்சமா?” – ஜெயக்குமார் ஆவேசம்!

MUST READ