அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த கட்சித் தாவல்களால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அதிமுகவின் முன்னாள் முக்கிய நிர்வாகிகள் சிலர், தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கூறி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக நிர்வாகிகள்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, ஏற்கெனவே அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
அவரைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் விஜயபாலாஜி என்ற துர்க்கை துரை, மணிமுத்தாறு முன்னாள் நகரச் செயலாளர் ராமையா மற்றும் பிரம்மதேசத்தைச் சேர்ந்த நிர்வாகி சக்திவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.
மீண்டும் அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள்
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக் கூறி அதிருப்தியில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.

மேலும், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளான புவனேஷ் மற்றும் கே.வி. சுப்பிரமணியன் ஆகியோரும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அம்பாசமுத்திரத்தில் அரசியல் பரபரப்பு
இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள அம்பாசமுத்திரம் தொகுதியில் முக்கிய நிர்வாகிகள் கட்சி மாறி வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. தவெகவில் இணைந்திருந்த முன்னாள் அதிமுக நிர்வாகிகள் மீண்டும் தாய் கட்சிக்குத் திரும்பியிருப்பது, அம்பாசமுத்திரம் தொகுதியில் தவெகவுக்கு பின்னடைவாக அமையக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
