Homeசெய்திகள்தமிழ்நாடுசர்வே கல்லா, தீபத்தூணா என்பதை இறுதி செய்யாமல் இடைக்காலமாக தீபம் ஏற்ற அனுமதியா? – உச்சநீதிமன்ற...

சர்வே கல்லா, தீபத்தூணா என்பதை இறுதி செய்யாமல் இடைக்காலமாக தீபம் ஏற்ற அனுமதியா? – உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில், நடப்பு ஆண்டு கார்த்திகை தீபத்தன்று மட்டும் தீபம் ஏற்றிக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், வழக்கின் அடிப்படை அம்சங்களைத் தீர்மானிக்காமல் வழங்கப்பட்ட உத்தரவு என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விமர்சித்துள்ளார்.சர்வே கல்லா, தீபத்தூணா என்பதை இறுதி செய்யாமல் இடைக்காலமாக தீபம் ஏற்ற அனுமதியா? – உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!

நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் முரண்பாடுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருபுறம் மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்துவிட்டு, மறுபுறம் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியிருப்பது முரண்பாடாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தீபம் ஏற்றும் இடத்திற்கு தனிநபர்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும், கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் உத்தரவில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனிநபர்கள் கூட்டமாகச் செல்வதற்கும், முழக்கங்கள் எழுப்புவதற்கும் அனுமதி இல்லை என்றும், இந்த இடைக்கால உத்தரவை முன்வைத்து எதிர்காலத்தில் அந்த இடத்தில் ஏற்கெனவே தீபம் ஏற்றப்பட்டதாக வாதிட முடியாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இடைக்கால உத்தரவு என்பது பிரதான வழக்கின் விசாரணையையோ, அதன் அடிப்படை அம்சங்களையோ பாதிக்கக் கூடாது என்று வலியுறுத்திய வாஞ்சிநாதன், இந்த விவகாரத்தில் முதலில் தீர்மானிக்க வேண்டிய இரண்டு முக்கியக் கேள்விகளை முன்வைத்துள்ளார். சம்பந்தப்பட்ட கல் அமைந்துள்ள இடம் யாருக்குச் சொந்தமானது என்பது முதல் கேள்வி என்றும், அங்குள்ள கல் சர்வே கல்லா அல்லது தீபத்தூணா என்பது இரண்டாவது கேள்வி என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கோயில் தரப்பில் அது தீபத்தூண் இல்லை என்றும், அரசுத் தரப்பில் சர்வே கல் என்றும், சங் பரிவார் அமைப்புகள் தரப்பில் தீபத்தூண் என்றும் வெவ்வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு அந்த இடத்தின் தன்மையே இறுதி செய்யப்படாத நிலையில், இடைக்காலமாகத் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியிருப்பது அபத்தமானது என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், பிரதான வழக்கின் இறுதி விசாரணையில் அது சர்வே கல் எனத் தீர்மானிக்கப்பட்டால், இந்த ஒருமுறை தீபம் ஏற்றப்பட்ட நிகழ்வு ஆன்மீக ரீதியிலான மீறலாகவும், கோயிலின் பழக்கவழக்க மரபை அவமதிக்கும் செயலாகவும் பார்க்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையான சி.ஐ.எஸ்.எஃப் (CISF) படையைப் பயன்படுத்தலாம் என உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் வாஞ்சிநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தமிழ்நாடு அரசையும், தமிழ்நாட்டு மக்களையும் உச்சநீதிமன்றம் அவமதிக்கும் செயலாகும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து!

MUST READ