Homeசெய்திகள்தமிழ்நாடுசெக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த விவகாரம்: பாலகிருஷ்ணன் குடும்பத்தினரைச் சந்தித்து கனிமொழி எம்.பி....

செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த விவகாரம்: பாலகிருஷ்ணன் குடும்பத்தினரைச் சந்தித்து கனிமொழி எம்.பி. ஆறுதல் – தவெக அரசு மீது கடும் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், கடந்த 13-ஆம் தேதி காவல் நிலையக் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த விவகாரம்: பாலகிருஷ்ணன் குடும்பத்தினரைச் சந்தித்து கனிமொழி எம்.பி. ஆறுதல் – தவெக அரசு மீது கடும் குற்றச்சாட்டு!

ஆனால், பாலகிருஷ்ணனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது குடும்பத்தினர் தொடர்ந்து நியாயம் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாலகிருஷ்ணனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் மதுரை அடுத்த பரவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர். அவர்களை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாலகிருஷ்ணனின் மரணத்தில் உரிய விசாரணை நடத்தி குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது பேசிய கனிமொழி, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் கூறும் நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குடும்பத்தினர் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

நியாயம் கேட்டு போராடுபவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்யப்படுவதாகவும், ராணுவத்தில் பணியாற்றும் பாலகிருஷ்ணனின் சகோதரர் மற்றும் அவரது 17 வயது மகன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், பாலகிருஷ்ணனின் குடும்பத்தினரை மிரட்டி வருவதாகவும், குடும்ப உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வராமல் தடுக்க அரசு முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பாலகிருஷ்ணனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

பாலகிருஷ்ணனின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், தலையில் ரத்தக்கசிவு, நுரையீரலில் காயம், கை மற்றும் கால்களில் அடிபட்ட காயங்கள், ரத்தக்கட்டுகள் இருந்ததாகவும் கூறப்படுவதைச் சுட்டிக்காட்டிய கனிமொழி, தூக்கிட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் ஒருவருக்கு இத்தகைய காயங்கள் எவ்வாறு ஏற்பட்டன என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தலுக்கு முன்பு அப்போதைய முதலமைச்சரிடம் நியாயம் கேட்டு தற்போதைய முதலமைச்சர் விஜய் பேசியதை நினைவுபடுத்தினார்.

அப்போது மன்னிப்பு மட்டும் போதாது, நியாயம் வேண்டும் என்று கூறியவர், தற்போது ஆட்சியில் இருக்கும்போது பாலகிருஷ்ணன் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விமர்சித்தார். முந்தைய ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறவும், நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர்கள் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், பாலகிருஷ்ணன் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்கக்கூட அரசு தரப்பில் இருந்து யாரும் வரவில்லை என்றும் குற்றம்சாட்டினார். விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் நியாயம் கேட்பவர்களை வழக்குகள் மூலம் மிரட்டி, பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர அரசு நினைப்பதாகவும் கூறினார்.

மேலும், திமுகவினரை அச்சுறுத்தும் நோக்கில் ஏற்கெனவே முடிவடைந்த விவகாரங்களை மீண்டும் கையில் எடுத்து வழக்குப் பதிவு செய்வதாகவும், மதுரை அருகே முன்னாள் அமைச்சர் மூர்த்தி தொடர்பான விவகாரத்திலும் இதேபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஆட்சிக்கு வந்த பிறகு குற்றங்கள் நடைபெறாது என்று கூறியவர்கள் ஆட்சியில், தினசரி குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வழக்குகள் மற்றும் கஞ்சா தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவதாகவும் விமர்சித்தார்.

பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து மிரட்டி, இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி நடப்பதாகவும் கனிமொழி குற்றம்சாட்டினார்.

பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் மீதான அச்சுறுத்தல்களை நிறுத்தி, அவரது மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நான்கு நாட்களாகப் போராடினோம்… இனியும் எங்களிடம் தெம்பில்லை; அண்ணனின் உடலைப் பெற்றுக்கொள்கிறோம் – கண்ணீர் மல்கப் பேட்டியளித்த பாலகிருஷ்ணனின் தம்பி!

MUST READ