Homeசெய்திகள்சட்டம்பரந்தூர் விமான நிலையத் திட்டம் : கோடிக்கணக்கான வரிப்பணம் வீணா?  ஐகோர்ட் சரமாரி கேள்வி!

பரந்தூர் விமான நிலையத் திட்டம் : கோடிக்கணக்கான வரிப்பணம் வீணா?  ஐகோர்ட் சரமாரி கேள்வி!

-

- Advertisement -

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் வரிப்பணம் செலவு செய்யப்பட்ட நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைத் தற்போது கைவிட்டது ஏன் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கின் பின்னணி: சென்னையைச் சேர்ந்த மின் பொறியாளரும், பதிப்பாளருமான கௌதமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

  • திட்டத்தின் நோக்கம்: ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் இடநெருக்கடியைச் சமாளிக்க, ரூ.27,000 கோடி மதிப்பீட்டில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

  • நிலம் கையகப்படுத்தல்: பன்னூர், திருப்போரூர், படாலம் ஆகிய இடங்களை ஆய்வு செய்த பிறகே, 2,325 ஹெக்டேர் பரப்பளவில் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக 2023-ம் ஆண்டு 1,527 ஹெக்டேர் தனியார் நிலங்களைக் கையகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டு, 798 ஹெக்டேர் அரசு நிலமும் வகை மாற்றம் செய்யப்பட்டது.
    பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

  • செலவிடப்பட்ட வரிப்பணம்: இதுவரை 1,700 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த ரூ.680 கோடி அரசுப் பணம் செலவழிக்கப்பட்டு, சுமார் 48 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

  • திட்டம் கைவிடப்பட்டதன் சர்ச்சை: இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதலமைச்சர் விஜய், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் இத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். எந்தவித நிபுணர் குழு அறிக்கையோ, தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஆய்வுகளோ இன்றி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மனுதாரரின் கோரிக்கைகள்: சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட முதலமைச்சரின் அறிவிப்பை அமல்படுத்தவும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மேலும், திட்டத்தைக் கைவிட்ட முடிவை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அறிவித்து, அதனை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தில் காரசார விவாதம்: இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “பரந்தூர் விமான நிலையம் அமைக்கக் கடந்த ஆட்சியில் முறையாக ஆய்வு செய்துதானே நிலம் கையகப்படுத்தப்பட்டது? மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணம் இதற்காகச் செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது திட்டத்தைக் கைவிடுவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண், “அப்பகுதியில் நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்கள் அதிகமாக இருந்ததால் இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவு. இது குறித்துச் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அரசாணையும் பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் ஆகியவை 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

MUST READ