Homeசெய்திகள்சட்டம்ராமநாதபுரம் அருகே கிராமத்தின் பாதி நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில்? – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை...

ராமநாதபுரம் அருகே கிராமத்தின் பாதி நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில்? – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி; ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

-

- Advertisement -

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள லட்சுமணன் குடியிருப்பு கிராமத்தில், அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைப் புறம்போக்கு நிலங்கள் தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரம் அருகே கிராமத்தின் பாதி நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில்? – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி; ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

ராமநாதபுரம் மாவட்டம் உரப்புளி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் இந்தப் பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், பரமக்குடி வட்டம் உரப்புளி பகுதியில் வைகை ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள லட்சுமணன் குடியிருப்பு என்ற சிறிய கிராமத்தில் விவசாயமே பிரதானத் தொழிலாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கிராமத்தில் தினகரன் என்பவர் அரசுக்குச் சொந்தமான சர்க்கார் புறம்போக்கு, நீர்நிலைப் புறம்போக்கு மற்றும் கிராம நத்தம் நிலங்களைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், கிராமத்தின் பாதி நிலங்களைத் தனது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் பட்டாவாக மாற்றிக் கொண்டு, ஒட்டுமொத்த கிராமத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளிக்குச் சொந்தமான நிலங்களையும் தனது பெயருக்கு மாற்றியுள்ளதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் கிராம மக்களுக்கு குடிநீர்க் குழாய் பதிப்பது, பொதுப்பாதையைப் பயன்படுத்துவது, அவசரக் காலங்களில் ஆம்புலன்ஸ் வருவது உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலங்களைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து மூடியுள்ளதாகவும், இதனால் சுமார் 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதால், கிராமப் பெண்கள் இயற்கை உபாதைகளுக்குக்கூடச் செல்ல முடியாத வகையில் சிரமங்களை எதிர்கொள்வதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அரசு நிலங்களைப் போலி ஆவணங்கள் மூலம் பட்டாவாக மாற்றி ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் நபர் மீது நடவடிக்கை எடுத்து, கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளை உறுதிசெய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலமேகம், அரசுக்குச் சொந்தமான நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆளுங்கட்சியினரின் துணையுடன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாத வகையில் சம்பந்தப்பட்ட நபர் தடுப்பதாகவும் வாதிட்டார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இடங்கள் தொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கிராமத்தில் வருவாய்த்துறையினர் மற்றும் வட்டாட்சியர் இருக்கிறார்களா, இல்லையா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தனிநபர் ஒருவர் எப்படி இவ்வளவு நிலங்களை ஆக்கிரமிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, மனுவில் கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, அதன் நிலை அறிக்கையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைப் பாதியில் கைவிடுவது எப்படி? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி – 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு!

MUST READ