ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டியலின மக்கள் பொதுப்பாதையைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடையூறு செய்வதாக அளிக்கப்பட்ட புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வழக்கில், காவல்துறையின் செயல்பாடு குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும், வழக்கை விசாரித்த அதிகாரியின் நியமனத்தை ரத்து செய்து, நேர்மையான காவல் துணைக் கண்காணிப்பாளர் மூலம் புதிதாக விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுப்பாதையைப் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததாகப் புகார்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், முத்துவிஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்த இருளாண்டி என்பவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில், நகரத்தார் குறிச்சியில் உள்ள கோவில் திருவிழாவிற்குத் தங்கள் கிராம மக்கள் பொதுப்பாதையைப் பயன்படுத்திச் சென்றபோது, அங்கிருந்த சிலர் பட்டியலின மக்கள் அந்தப் பாதையைப் பயன்படுத்தக் கூடாது எனக் கூறி இடையூறு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அபிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவல் ஆய்வாளர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், வழக்கை முறையாக விசாரிக்கவும் உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
புகார் அளித்து 19 நாட்களுக்குப் பிறகு வழக்குப்பதிவு
இந்த வழக்கு விசாரணையின்போது காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், புகார் அளிக்கப்பட்டு சுமார் 19 நாட்களுக்குப் பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்தத் தாமதத்திற்கு உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகளை, சட்ட விதிகளின்படி காவல் துணைக் கண்காணிப்பாளர் (DSP) நிலைக்குக் குறையாத அதிகாரியே விசாரிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியது.
விசாரணை அதிகாரியின் நியமனம் ரத்து
இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர், சம்பவம் நடைபெற்ற இடத்தில் அப்போது இருந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதுபோன்ற சூழலில், சம்பவ இடத்தில் இருந்த அதிகாரியே தொடர்ந்து விசாரணை நடத்துவது அவரது நடுநிலைத்தன்மை குறித்து நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தும் என நீதிமன்றம் தெரிவித்தது.
எனவே, அவரை விசாரணை அதிகாரியாக நியமித்த உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், அவர் மேற்கொண்ட விசாரணையையும் ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டது.
காவல் ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கை
பட்டியலின மக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் நியாயமாகவும், பாரபட்சமின்றியும் செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய பல வழக்குகளை நீதிமன்றம் தொடர்ந்து சந்தித்து வருவதாகவும் அதிருப்தி தெரிவித்தது.
புகார் அளிக்கப்பட்ட உடனேயே வழக்குப்பதிவு செய்யத் தவறிய அபிராமம் காவல் நிலைய ஆய்வாளர் மீது உரிய துறைரீதியான நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டது.
இரண்டு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க, சம்பவம் நடைபெற்ற இடத்தில் இல்லாத நேர்மையான காவல் துணைக் கண்காணிப்பாளர் ஒருவரை நியமிக்க தென்மண்டல காவல்துறைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதிதாக நியமிக்கப்படும் அதிகாரி சட்டப்படி சுதந்திரமாகவும், நியாயமாகவும், பாரபட்சமின்றியும் விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
மேலும், காவல் ஆய்வாளர் மீது எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கை குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
