தென்காசி மாவட்டம் மேற்கரை கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான நிலத்தில் மாவட்ட வன அலுவலர் அமைத்த இரும்பு கேட்டை அகற்றக் கோரிய வழக்கில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழக வனத்துறை முதன்மைச் செயலர், தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருவாவடுதுறை ஆதீனத்தின் தென் மண்டல மேலாளர் ராமச்சந்திரன் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு இந்தியா முழுவதும் நிலங்கள் இருப்பதாகவும், தென்காசி மாவட்டம் மேற்கரை கிராமத்தில் 1,859 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையின் அடைநைனார் கோவில் நீர்த்தேக்கத் திட்டத்திற்காக அருகிலுள்ள கிராமத்தில் சுமார் 13.70 ஹெக்டேர் வன நிலம் எடுக்கப்பட்டதாகவும், அதற்கு இழப்பீடாக ஆதீனத்தின் ஒப்புதலுடன் மேற்கரை கிராமத்தில் உள்ள 32.40 ஹெக்டேர் நிலம் வனத்துறையால் கையகப்படுத்தப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2025-ஆம் ஆண்டு குத்தகைதாரர்களின் உரிமையில் தலையிடத் தொடங்கியபோது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆதீனத்துக்குச் சொந்தமான 32.40 ஹெக்டேர் நிலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், 1997-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளுக்குப் பதிலாக 32.40 ஹெக்டேர் நிலத்துக்குப் பதில் 59 ஹெக்டேர் என புதிய எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது சட்டவிரோதமானது என்றும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
தென்காசி மாவட்ட வன அலுவலர் ஆதீன நிலங்களுக்குள் நுழைந்து, அவற்றை வன நிலம் எனக் கூறி இரும்பு கேட் அமைத்ததாகவும், இதனால் விவசாய நிலங்களுக்குச் செல்லும் பாதை மறிக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரரின் பட்டா நிலத்தில் உள்ள பழங்களை அறுவடை செய்யும் காலத்தில் மட்டும் இலகுரக வணிக வாகனங்கள் மூலம் நிலத்துக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
மேலும், வேறு எந்த நபருக்கும் அந்த நிலத்தை அணுக அனுமதி வழங்கக் கூடாது என்றும், வனப்பகுதிகளில் வசிக்கும் குத்தகைதாரர்களின் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன், அந்தச் சொத்தில் வணிக அல்லது சுற்றுலா நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றும், வன நிலத்தில் பட்டா எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவு முந்தைய கால நிகழ்வுகளைக் கவனத்தில் கொள்ளாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய மனுதாரர், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யவும், அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு மேல்முறையீட்டு மனு முடிவடையும் வரை தடை விதிக்கவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட பகுதியில் விவசாய நிலம் இல்லை என்றும், அங்கு ரிசார்ட்டே செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், “அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் ரிசார்ட் இருந்தால் என்ன? விவசாய நிலம் இருந்தால் என்ன?” எனக் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, வழக்கு தொடர்பாக தமிழக வனத்துறை முதன்மைச் செயலர், தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
