Homeசெய்திகள்சட்டம்​ரூ.75 கோடி ஜீவனாம்சம்: 13 ஆண்டு திருமண உறவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி...

​ரூ.75 கோடி ஜீவனாம்சம்: 13 ஆண்டு திருமண உறவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

-

- Advertisement -

13 ஆண்டுகளாக நீடித்து வந்த திருமணப் பிரச்சினை மற்றும் அதனைத் தொடர்ந்து தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிரிந்துவாழ்ந்த தம்பதியரின் திருமணத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதற்காக கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட ரூ.75 கோடி மதிப்பிலான சமரச ஒப்பந்தத்தையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி, மனைவிக்கு ரூ.30 கோடி நிரந்தர ஜீவனாம்சமாகவும், 9 வயது மகனின் எதிர்காலத்திற்காக ரூ.45 கோடியும் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவைப் பயன்படுத்திய நீதிமன்றம்

நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா, என். கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, நவம்பர் 16-ஆம் தேதி இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

அங்கித் சரையா – பூஜா சரையா தம்பதியினர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2017-ஆம் ஆண்டு மே மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குடும்பப் பிரச்சினைகள் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, குடும்ப வன்முறை புகார் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணையின்போது இருவரும் சமரசத்திற்கு முன்வந்தனர். இதையடுத்து, அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவின்கீழ் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, திருமணத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனைவிக்கு ரூ.30 கோடி நிரந்தர ஜீவனாம்சம்

சமரச ஒப்பந்தத்தின்படி, மனைவி பூஜா சரையாவுக்கு ரூ.30 கோடி நிரந்தர ஜீவனாம்சமாக வழங்க கணவர் அங்கித் சரையா ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தத் தொகை வங்கி வரைவோலை (Demand Draft) மூலம் வழங்கப்பட வேண்டும். கொல்கத்தாவில் உள்ள குடும்ப வீட்டின் சாவிகள் மற்றும் காலி வீட்டின் அமைதியான உடைமையை மனைவி ஒப்படைக்கும் அதே நேரத்தில், ஜீவனாம்சத் தொகையை வழங்க வேண்டும் என்றும், இந்த நடைமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகனின் எதிர்காலத்திற்காக ரூ.45 கோடி

தம்பதியரின் 9 வயது மகனின் கல்வி, மருத்துவம் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைத் தாயார் அறக்கட்டளை (Trust) மூலம் மகனுக்காக நிர்வகிப்பார்.

மேலும், அந்த அறக்கட்டளையின் நிதியில் இருந்து ரூ.5 கோடி வரையிலான மதிப்பில் குடியிருப்பு ஒன்றை வாங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடு அறக்கட்டளையின் பெயரிலேயே இருக்கும்.

அந்த வீட்டில் தாயார் மறுமணம் செய்துகொள்ளும் வரை அல்லது மகனுக்கு 25 வயது ஆகும் வரை வசிக்கலாம். இவற்றில் எது முதலில் நடைபெறுகிறதோ அதுவரை அவருக்கு வசிக்கும் உரிமை உண்டு. மகனுக்கு 25 வயது ஆன பிறகும் தாயார் மறுமணம் செய்யாமல் இருந்தால், தொடர்ந்து அந்த வீட்டில் வசிப்பது குறித்து மகனே முடிவு செய்யலாம்.

தந்தைக்கு மகனைச் சந்திக்கும் உரிமை

மகனைச் சந்திப்பதற்கான தந்தையின் உரிமையும் ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக கல்கத்தா உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வகுத்திருந்த குழந்தை பராமரிப்பு மற்றும் சந்திப்பு நடைமுறைகள் (Parenting Plan) பின்பற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறையில் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், குழந்தையின் நலனுக்கு முன்னுரிமை அளித்து இருவரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்றும், அது முடியாவிட்டால் உரிய நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகால வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி

குடும்ப வன்முறை புகார், திருமண வழக்கு, குற்றவியல் வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகள் உள்ளிட்ட இருவருக்கும் இடையிலான நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளையும் முடிவுக்குக் கொண்டுவர சமரச ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை உச்ச நீதிமன்றம் தனது உத்தரவின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் 13 ஆண்டுகளாக நீடித்த திருமண உறவு சட்டப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.

பூர்வீக சொத்து விற்பனை: பேரன், பேத்திகளுக்கு உரிமை கோர முடியாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

MUST READ