Homeசெய்திகள்கட்டுரைபூர்வீக சொத்து விற்பனை: பேரன், பேத்திகளுக்கு உரிமை கோர முடியாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

பூர்வீக சொத்து விற்பனை: பேரன், பேத்திகளுக்கு உரிமை கோர முடியாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

-

- Advertisement -

தாத்தா அல்லது தந்தை வழியில் கிடைத்த சொத்துகளில் பேரன், பேத்திகளுக்குப் பிறப்பின் அடிப்படையிலேயே பங்கு கிடைக்கும் என்று உரிமை கோர முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்துரிமை மற்றும் பாகப்பிரிவினை தொடர்பான வழக்கில் நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் மற்றும் சுனிதா அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

we-r-hiring

வழக்கின் பின்னணி

கடந்த 1993-ஆம் ஆண்டு ராமகிருஷ்ணன் என்பவரின் சொத்துகளைப் பாகப்பிரிவினை செய்யக் கோரி அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ராமகிருஷ்ணன் தனது சொந்த உழைப்பால் சம்பாதித்த சொத்துகள், 1994-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக வாரிசுதாரர்களுக்குச் சமமாகப் பிரித்து வழங்கப்பட்டன.

இந்தப் பாகப்பிரிவினையில் ராமகிருஷ்ணனின் மகன் குமாருக்கும் சொத்துகள் கிடைத்தன. பின்னர் அந்தச் சொத்துகளை குமார் வேறொருவருக்கு விற்பனை செய்தார்.

இதற்கிடையே பிறந்த அவரது மகன் ராஜேஷ், அந்தச் சொத்துகள் பூர்வீகச் சொத்துகள் என்றும், பிறப்பின் அடிப்படையில் தனக்கும் அதில் உரிமை இருப்பதாகவும் கூறி வழக்குத் தொடர்ந்தார். விற்பனை செய்யப்பட்ட சொத்தில் தனக்குரிய பங்கை வழங்க வேண்டும் என அவர் கோரினார். பல்வேறு கீழமை நீதிமன்றங்களைக் கடந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தை வந்தடைந்தது.

உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒருவர் தனது சுய சம்பாத்தியத்தில் பெற்ற சொத்துகளை வாரிசுகளுக்குப் பாகப்பிரிவினை செய்து வழங்கும்போது, அந்தப் பாகப்பிரிவினையின் மூலம் சொத்தைப் பெறும் மகன் அதன் முழு உரிமையாளராகிறார் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

அந்தச் சொத்தின் மீது தந்தை உயிருடன் இருக்கும்போது பேரன் அல்லது பேத்திகள் பிறப்பின் அடிப்படையில் நேரடியாக உரிமை கோர முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், முழு உரிமையுடன் சொத்தைப் பெற்றவர் தனது வாழ்நாளில் அதனை விற்பனை செய்தாலோ அல்லது வேறு வகையில் மாற்றம் செய்தாலோ, பின்னர் பிறக்கும் வாரிசுகள் அந்தச் சொத்தில் உரிமை கோர முடியாது எனத் தீர்ப்பில் விளக்கப்பட்டுள்ளது.

சொத்துரிமை மற்றும் பாகப்பிரிவினை தொடர்பாக நிலவி வந்த சட்ட விளக்கங்களுக்கு இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அமித்ஷாவைச் சந்தித்தார் தமிழக ஆளுநர் அருளேகர்: சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து தீவிர ஆலோசனை!

MUST READ