Homeசெய்திகள்சட்டம்171.17 ஏக்கர் கோவில் நிலம்; 86 சென்ட் தர்கா நிலம் – நீதிமன்றத்தில் எழுந்த முக்கிய...

171.17 ஏக்கர் கோவில் நிலம்; 86 சென்ட் தர்கா நிலம் – நீதிமன்றத்தில் எழுந்த முக்கிய வாதம்!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட கல்தூண் அருகே கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், மனுதாரர் மற்றும் எதிர்தரப்பினர் தங்களது வாதங்களை முன்வைத்துள்ளனர். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளை (நவம்பர் 20, 2026) ஒத்திவைத்துள்ளது.

மனுதாரர் ரங்கநாதன் தரப்பு வாதம்

தர்கா அருகில் கார்த்திகை தீபம் ஏற்றக் கூடாது என வலியுறுத்தி ரங்கநாதன் என்பவர் தொடர்ந்த மனு மீதான விசாரணையின்போது, அவரது வழக்கறிஞர் வரலாற்று நிகழ்வுகள் மற்றும் முந்தைய நீதிமன்றத் தீர்ப்புகளை முன்வைத்தார்.

1862 மற்றும் 1902-ம் ஆண்டுகளில் திருப்பரங்குன்றம் மலை மற்றும் சிக்கந்தர் மலைப் பகுதிகளில் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் சிலர் தர்கா அருகே கார்த்திகை தீபம் ஏற்ற முயன்றதாகவும், அந்த முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 1994-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இதேபோன்று தர்கா அருகே தீபம் ஏற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டபோது, அங்கு தீபம் ஏற்றுவது மரபு அல்ல என்பதால் அந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டினர்.

அதேபோல், நெல்லித்தோப்பு பகுதியில் விலங்குகளைப் பலியிட்டு வழிபட அனுமதி கோரிய விவகாரத்திலும், அத்தகைய வழக்கம் முன்பு இருந்ததில்லை என்பதால் அனுமதி வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்ததாக மனுதாரர் தரப்பு குறிப்பிட்டது.

நூற்றாண்டு காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளை மாற்ற முடியாது என்றும், இந்த நடைமுறை இந்துக்களுக்கு மட்டுமின்றி தர்காவுக்கும் பொருந்தும் என்றும் அவர்கள் வாதிட்டனர். தர்காவில் நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் வழக்கங்களிலும் புதிதாக எந்த நடைமுறையையும் புகுத்த முடியாது என்றும் தெரிவித்தனர்.

ராம ரவிக்குமார் தரப்பு முன்வைத்த நில உரிமை வாதம்

மறுபுறம், ராம ரவிக்குமார் தரப்பில் நில உரிமை தொடர்பான விவரங்கள் முன்வைக்கப்பட்டன.

நெல்லித்தோப்பு தர்காவுக்குச் சொந்தமாக 33 சென்ட் நிலம் மட்டுமே இருப்பதாகவும், படிக்கட்டுகள், கொடிமரம், புதுமண்டபம் உள்ளிட்ட பகுதிகளையும் சேர்த்தாலும் தர்காவின் மொத்த நிலப்பரப்பு 86 சென்ட் மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில், கோவிலுக்கு 171.17 ஏக்கர் நிலம் சொந்தமாக இருப்பதாகவும் அந்தத் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

குறிப்பிட்ட கல்தூண் கோவில் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதியிலேயே அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள், தர்காவுக்குச் சொந்தமான 86 சென்ட் நிலத்திற்குள் சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்று தாங்கள் கோரவில்லை என்றும், கோவில் நிர்வாகத்துக்கு உட்பட்ட இடத்தில்தான் தீபம் ஏற்ற அனுமதி கோருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், ஆண்டுக்கு ஒரே ஒரு நாள், இரண்டு மணி நேரம் மட்டுமே அந்த இடத்தில் தீபம் ஏற்றுவதால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்றும் கேள்வி எழுப்பினர்.

நாளை மீண்டும் விசாரணை

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ஒருபுறம் பழமையான வழிபாட்டு மரபுகள் மற்றும் முந்தைய நீதிமன்றத் தீர்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன. மறுபுறம், குறிப்பிட்ட இடத்தின் நில உரிமை மற்றும் கோவில் நிர்வாகத்தின் அதிகார வரம்பு தொடர்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இரு தரப்பு வாதங்களும் பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை (நவம்பர் 20) நடைபெற உள்ளது. இந்த விசாரணையில் நீதிமன்றம் எத்தகைய கருத்துகளை முன்வைக்கிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: கல் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

MUST READ