Homeசெய்திகள்சட்டம்வெளிமாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்த உயர்நீதிமன்றம் – உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...

வெளிமாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்த உயர்நீதிமன்றம் – உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

-

- Advertisement -

தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.வெளிமாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்த உயர்நீதிமன்றம் – உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சட்டவிரோதக் குவாரி மற்றும் சுரங்கச் செயல்பாடுகளைத் தடுக்கவும், தாதுமணல் உள்ளிட்ட கனிம வளக் கொள்ளையை கட்டுப்படுத்தவும், மணல், எம்-சாண்ட் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைப் போக்கவும் மாநில அரசு கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லத் தடை விதித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் 15 மற்றும் 23C ஆகிய பிரிவுகள் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்குவதாகவும், அந்தச் சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் தமிழ்நாடு கனிமங்கள் (சட்டவிரோதமாக வெட்டியெடுத்தல், கொண்டு செல்லுதல் மற்றும் சேமித்து வைத்தல் மற்றும் கனிம விற்பனையாளர்கள்) விதிகள், 2011-ல் 3A என்ற பிரிவு சேர்க்கப்பட்டு இந்தத் தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு விதித்திருந்த இந்தத் தடையைத்தான் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், செயற்கையான விலை உயர்வும் உருவாகக்கூடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவலை தெரிவித்துள்ளது. இதனால் கட்டுமானப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்றும், கனிம வளங்களின் சட்டவிரோதக் கடத்தல் அதிகரிக்கவும், இயற்கை வளங்கள் வரம்பின்றி வெட்டி எடுக்கப்படவும் வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுவதுடன், ஏழை, எளிய மக்கள் வீடு கட்ட முடியாத நிலையும் உருவாகலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

கனிமவளக் கடத்தலைத் தடுக்கும் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது – உச்சநீதிமன்றத்தில் வலிமையாக வாதிட வேண்டும்: அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

MUST READ