நாகை தவெக நிர்வாகி தொடர்பான போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அனுப்பிய வழக்கறிஞர் நோட்டீஸுக்கு, மன்னிப்பு கேட்க முடியாது என திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான இ. பரந்தாமன் பதிலளித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கடலோரக் கிராமம் ஒன்றிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்பட இருந்ததாகக் கூறப்படும் ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சுமார் 137 கிலோ படிக மெத்தம்பெட்டமைனை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தவெக நாகப்பட்டினம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என். பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிறு துறைமுகங்கள் துறையின் பொறுப்பு அமைச்சரும், தமிழ்நாடு கடல்சார் வாரியத் தலைவருமான ஆதவ் அர்ஜூனா இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியதற்காக, தன்னை அச்சுறுத்தும் நோக்கில் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுவெளியில் ஏற்கெனவே உள்ள தகவல்களின் அடிப்படையிலேயே மக்கள் பிரச்சினை குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாகவும், எனவே மன்னிப்போ அல்லது நஷ்டஈடோ வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பரந்தாமன் தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஆதவ் அர்ஜூனா வழக்குத் தொடர்ந்தால் அதனைச் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தனது வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பியுள்ளார்.
