Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிகாரப் பகிர்வுக்காகக் கொள்கையை அடமானம் வைக்காதீர்கள் – தொல். திருமாவளவனுக்கு தொண்டரின் உருக்கமான கடிதம்!

அதிகாரப் பகிர்வுக்காகக் கொள்கையை அடமானம் வைக்காதீர்கள் – தொல். திருமாவளவனுக்கு தொண்டரின் உருக்கமான கடிதம்!

-

- Advertisement -

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சமீபத்திய அரசியல் முடிவுகள், கூட்டணி அணுகுமுறைகள் மற்றும் கட்சியின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து அக்கட்சியைச் சேர்ந்த அடிமட்டத் தொண்டர் ஒருவர் எழுதியுள்ள உருக்கமான கடிதம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.அதிகாரப் பகிர்வுக்காகக் கொள்கையை அடமானம் வைக்காதீர்கள் – தொல். திருமாவளவனுக்கு தொண்டரின் உருக்கமான கடிதம்!

தலித் விடுதலை அரசியலில் திருமாவளவன் ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்புகளை நினைவுகூர்ந்து தொடங்கும் அந்தக் கடிதத்தில், கட்சியின் தற்போதைய அரசியல் போக்கு குறித்த அதிருப்தியும் எதிர்காலம் குறித்த கவலையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

2026 சட்டமன்றத் தேர்தலின்போது புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில், பதவியில் இருந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத முடிவை வரவேற்பதாகத் தொண்டர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில், கட்சிக்கும் அம்பேத்கரியக் கொள்கைகளுக்கும் தொடர்பில்லாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டு பின்னர் பின்வாங்கிய நிலையில், அப்பகுதியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வனுக்கு வாய்ப்பு வழங்காமல் செய்யூர் தொகுதியில் நிறுத்தியது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியில் தன்னைத் தவிர வேறு யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடா இது என்ற சந்தேகத்தையும் கடிதத்தில் முன்வைத்துள்ளார்.

ஆட்சியில் பங்கேற்ற முடிவு குறித்து அதிருப்தி

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது தொடர்பாக இடதுசாரிக் கட்சிகளின் முடிவைப் பின்பற்றுவதாகக் கூறிய நிலையில், திமுக மற்றும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது, அது தோல்வியடைந்த பின்னர் தவெகவுக்கு ஆதரவு அளித்தது, ஒரே வாரத்தில் அமைச்சரவையில் இணைந்தது என அடுத்தடுத்து எடுக்கப்பட்ட முடிவுகள் கட்சியின் நம்பகத்தன்மையைச் சீர்குலைத்துவிட்டதாகத் தொண்டர் குற்றம்சாட்டியுள்ளார்.

இடதுசாரிக் கட்சிகளைப் போல ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்திருந்தால், அரசின் குறைகளுக்குக் கட்சி பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பிரச்சினைகளில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தேவை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வரலாற்றில் முதன்முறையாக வன்னியரசு அமைச்சராகப் பொறுப்பேற்றது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள தொண்டர், அதேநேரத்தில் பட்டியல் சமூக மாணவர்களுக்கான அயலகக் கல்வித் திட்டம், ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம், தாட்கோ நிதி முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலை இருப்பதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் சனாதன எதிர்ப்பையோ, பிரதமர் மோடியின் பெயரையோ உச்சரிக்க முடியாத சூழல் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பாஜகவுக்கு அஞ்சி செயல்படுவதாகத் தான் கருதும் ஆட்சியின் அமைச்சரவையில் நீடிப்பதைவிட, கட்சி தனித்து நின்று செயல்படலாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தலைமையின் கருத்துகளில் முரண்பாடு எனக் குற்றச்சாட்டு

மாற்றுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலைத் திணிக்கும் அரசின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தது குறித்தும் தொண்டர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். முதலமைச்சர் விஜய் பொதுவெளியில் மேடையைப் பகிர்ந்துகொள்ளத் தயங்குவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 2009ஆம் ஆண்டு ஒன்றிய அமைச்சர் பதவி கிடைப்பதை திமுக தடுத்ததாகத் திருமாவளவன் தெரிவித்த கருத்து, கட்சித் தலைவரின் கருத்துக்கும் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸின் கருத்துக்கும் இடையே காணப்படும் முரண்பாடுகள் ஆகியவை களத்தில் பணியாற்றும் தொண்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பழைய போர்க்குணம் மீண்டும் வெளிப்பட வேண்டும்

கொள்கைக்காக கடந்த 2004ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்த திருமாவளவனின் பழைய போர்க்குணம் மீண்டும் வெளிப்பட வேண்டும் என்று அந்தத் தொண்டர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரப் பகிர்வுக்காகக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளைச் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்றும், தேர்தல் அரசியலைத் தாண்டி மக்கள் மன்றத்திலும் போராட்டக் களத்திலும் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

கட்சியின் அடிமட்டத் தொண்டர் ஒருவர் எழுதியுள்ள இந்தக் கடிதம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தற்போதைய அரசியல் முடிவுகள் மற்றும் எதிர்காலப் பாதை குறித்த அவரது கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கூடாது – திருமுருகன் காந்தி வலியுறுத்தல்!

MUST READ