
திருப்பரங்குன்றம் மலை உச்சித் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தீர்ப்பை மாநில அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (நவம்பர் 21) செய்தியாளர்களைச் சந்தித்த திருமுருகன் காந்தி, திருப்பரங்குன்றம் வழக்கு மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.
செய்தியாளர் சந்திப்பில் திருமுருகன் காந்தி தெரிவித்த முக்கியக் கருத்துகள்:
நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிர்ப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வினோதமானதாகவும், சட்ட விரோதமானதாகவும் உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதி சாமிநாதனின் தீர்ப்பை அப்படியே உச்சநீதிமன்றம் பிரதிபலிக்கிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசின் நியாயமான கவலைகளை நிராகரித்து, தமிழர்களுக்கு விரோதமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி தவறு செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மாநில உரிமையில் தலையீடு: மாநில காவல்துறை இருக்கும்போது திருப்பரங்குன்றம் மலைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF) எதற்காக வர வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய அவர், இதன் மூலம் மாநில அரசின் உரிமையில் நீதிமன்றம் தலையிடுவதாகக் கூறினார். 200 ஆண்டுகால மரபை மாற்ற நீதிமன்றத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றும், அறுபடை வீடுகளில் இல்லாத ஒரு மரபை இங்கே திணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத நல்லிணக்கமும் வரலாறும்: தர்கா வழிபாடு என்பது தமிழர் மரபுகளில் ஒன்று எனக் குறிப்பிட்ட திருமுருகன் காந்தி, வரலாற்றில் சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் மருது பாண்டியர்கள் பல தர்காக்களைப் பராமரித்து விழாக்கள் நடத்தியுள்ளதாகத் தெரிவித்தார். இன்றும் சந்தனக்கூடு ஊர்வலம் உள்ளிட்ட தர்கா வழிபாடுகளில் இந்துக்களே அதிக அளவில் பங்கேற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் விமர்சனமும், அரசுக்கான அறிவுறுத்தலும்: பாபர் மசூதி இடிப்பைப் போல, மதத்தின் பெயரால் தமிழகத்தில் ஒரு மதக்கலவரத்தை உருவாக்க பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் திட்டமிடுவதாக அவர் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் ஏதேனும் கலவரம் ஏற்பட்டால் அதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி சாமிநாதனே முழுப் பொறுப்பாவார் என்றும், உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களைப் போல தமிழக மக்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் பாஜகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்பதால், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் தமிழக அரசுக்கு இல்லை என அறிவுறுத்துவதாகத் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.
வழக்கின் பின்னணி: முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம், வரும் நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தினத்தன்று ஒருமுறை மட்டும் கோயில் நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்தது. மேலும், பொதுமக்கள் கூடத் தடை விதித்ததோடு, சட்டம் – ஒழுங்கைப் பராமரிக்கத் தேவைப்பட்டால் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை (CISF) நிறுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
