தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையின் மதகுப் பகுதியில் இருந்து முன் அனுமதியின்றி சட்டவிரோதமாகத் தண்ணீர் திறந்து விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டன அறிக்கைகள் வெளியிட்டு எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்த நிலையில், தேனியில் இன்று நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற சோத்துப்பாறை அணை நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தினர் மற்றும் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அதில், முன் அனுமதியின்றி சட்டவிரோதமாக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதற்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி, சோத்துப்பாறை அணையின் மதகுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாகத் தண்ணீர் திறந்து விட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது எவ்விதப் பாரபட்சமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும், தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சோத்துப்பாறை அணை நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தினர் பேசுகையில், அரசாணை மற்றும் முன் அனுமதி இன்றி தண்ணீர் திறந்து விட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர்கள் எனப் புகார் அளித்திருப்பது வியப்பளிப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
