Homeசெய்திகள்தமிழ்நாடுநான்கு நாட்களாகப் போராடினோம்... இனியும் எங்களிடம் தெம்பில்லை; அண்ணனின் உடலைப் பெற்றுக்கொள்கிறோம் – கண்ணீர் மல்கப்...

நான்கு நாட்களாகப் போராடினோம்… இனியும் எங்களிடம் தெம்பில்லை; அண்ணனின் உடலைப் பெற்றுக்கொள்கிறோம் – கண்ணீர் மல்கப் பேட்டியளித்த பாலகிருஷ்ணனின் தம்பி!

-

- Advertisement -

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், அவரது உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.நான்கு நாட்களாகப் போராடினோம்... இனியும் எங்களிடம் தெம்பில்லை; அண்ணனின் உடலைப் பெற்றுக்கொள்கிறோம் – கண்ணீர் மல்கப் பேட்டியளித்த பாலகிருஷ்ணனின் தம்பி!

நான்கு நாட்களாக நீதி கேட்டு போராடினோம்; இனியும் எங்களிடம் உடலில் தெம்பில்லை” என்று பாலகிருஷ்ணனின் தம்பி மணிகண்டன் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் இருந்து மதுரை நோக்கி ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, வழியில் திடீரென தீப்பிடித்து எரிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் கடந்த 13-ஆம் தேதி இரவு இரண்டாம் கட்ட விசாரணைக்காக செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், மறுநாள் 14-ஆம் தேதி காலை காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நீதி கேட்டு, பாலகிருஷ்ணனின் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து அவரது உறவினர்கள் கடந்த நான்கு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணனின் தம்பி மணிகண்டன் கண்ணீர் மல்கப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “அசாமில் இருந்து வந்த என்னை, இறந்து போன என்னுடைய அண்ணனின் உடலைக்கூட பார்க்க அனுமதிக்கவில்லை. தல்லாகுளம் காவல்துறையினர் அடக்குமுறையைக் கையாண்டு, நீதி கேட்டு போராடிய எங்களைக் கைது செய்தனர்.

பாதுகாப்புப் பணியில் இருக்கக்கூடிய காவலர்கள், எனது வேலையை காலி செய்துவிடுவோம் என மிரட்டுகின்றனர். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே குடும்பத்தினரைப் பார்க்க வரும் என்னை, தற்போது இறந்து போன எனது சகோதரனின் உடலைக்கூட பார்க்க அனுமதிக்கவில்லை.

கடந்த நான்கு நாட்களாக நீதி கேட்டு போராடி வருகிறோம். இதற்கு மேலும் காவல்துறையினரை எதிர்த்துப் போராடுவதற்கு எங்களிடம் உடலில் தெம்பு இல்லை. எனவே, இனியும் போராட முடியாத நிலையில், எனது அண்ணனின் உடலைப் பெற்றுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

நான்கு நாட்களாக நீதி கேட்டு போராடி வந்த நிலையில், இனியும் போராட முடியாமல் தனது சகோதரனின் உடலைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக மணிகண்டன் தெரிவித்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உடல் ஒப்படைப்பு – 4 நாட்களுக்குப் பிறகு குடும்பத்தினர் சம்மதம்!

MUST READ