தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் உரிய வாதங்களை முன்வைத்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரை மாதாந்திர அடிப்படையில் பெற்றுத்தர முடியாத அரசாக தமிழக அரசு செயல்படுவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தஞ்சை மேற்கு ஒன்றியச் செயலாளர் ஓ.எஸ்.குமார் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து பேசினார்.
அப்போது, சம்பா சாகுபடிக்கு 45 நாட்கள் மட்டும் தண்ணீர் வழங்கினால் எப்படிப் போதுமானதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பிய அவர், ஜனவரி மாத இறுதி வரை காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டால்தான் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிரிட்டுள்ள சம்பா நெற்பயிர்களை முழுமையாக அறுவடை செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு காவிரி நதிநீர் பிரச்சினையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், காவிரி மேலாண்மை ஆணையம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கர்நாடக அணைகளிலிருந்து இவ்வளவு டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டாலும், அந்த உத்தரவுகளைப் பெறுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றார்.
தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரை மாதாந்திர அடிப்படையில் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பைப் பெற்றுத் தந்தது அதிமுக அரசு என்றும், அந்தத் தீர்ப்பைக்கூட தற்போதைய அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை என்றும் விமர்சித்தார்.
இதற்கிடையே, மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் தொடர்ந்து கூறி வருவது டெல்டா விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வரை மேகதாது அணை கட்டப்படுவதை எதிர்த்துப் போராடுவோம் என்றும் தெரிவித்தார். கீழ்ப்படுகை மாநிலத்தின் அனுமதியின்றி மேல்படுகை மாநிலம் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டவோ, தண்ணீரைத் தேக்கவோ அல்லது திருப்பிவிடவோ முடியாது என உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருப்பதாகக் கூறினார்.
மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் 11 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை எனத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் தமிழக அரசு சரியான வாதங்களை முன்வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு, கர்நாடகத்தில் பெய்யும் மழை, அணைகளுக்கு வரும் நீரின் அளவு உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து காவிரி மேலாண்மை ஆணையத்திடம் அளிப்பதாகவும், அதன் அடிப்படையில் இரு மாநில நீர்வளத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பிறகே நீர் திறப்பு தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகவும் விளக்கினார்.
அத்தகைய உத்தரவுகளைக்கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை இருப்பதாகக் குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, காவிரி நீர் கிடைக்காததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
