HomeBreaking Newsஎன்டிபிசி உதவி அதிகாரி தேர்வு திடீர் ரத்து:தேர்வர்கள் அதிர்ச்சி

என்டிபிசி உதவி அதிகாரி தேர்வு திடீர் ரத்து:தேர்வர்கள் அதிர்ச்சி

-

- Advertisement -

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி), உதவி அதிகாரி (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) பணியிடங்களுக்காக நவம்பர் 1-ஆம் தேதி நடத்திய தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

நிர்வாகக் காரணங்களுக்காகத் தேர்வு நடைமுறை ரத்து செய்யப்படுவதாக நவம்பர் 21-ஆம் தேதி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுதேர்வு குறித்து அறிவிப்பு இல்லை:

என்டிபிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வு ரத்துக்கான காரணம் நிர்வாகக் காரணங்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்தப்படுமா அல்லது புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்படுமா என்பது குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டும் அந்தத் தொகை திரும்ப வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான நடைமுறை மற்றும் கூடுதல் விவரங்கள் தேர்வர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 பணியிடங்களுக்கு 2,000-க்கும் மேற்பட்டோர் போட்டி:

என்டிபிசி நிறுவனத்தில் உதவி அதிகாரி (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) பணிக்காக மொத்தம் 15 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இப்பணியிடங்களுக்காக இந்தியா முழுவதும் 2,000-க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதியதாகக் கூறப்படுகிறது.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தத் தேர்வில் 120 பல்விருப்ப வினாக்கள் (MCQ) இடம்பெற்றன. ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 2 மதிப்பெண்களும், தவறான பதிலுக்கு 0.25 மதிப்பெண் எதிர்மறையாகவும் கணக்கிடப்படும் வகையில் தேர்வு நடத்தப்பட்டது.

பயணம், தங்குமிடச் செலவு: தேர்வர்கள் ஏமாற்றம்:

தேர்வு முடிந்து முடிவுகளுக்காகவும், அடுத்தகட்டத் தேர்வு மற்றும் நேர்காணல் குறித்த அறிவிப்புக்காகவும் காத்திருந்த தேர்வர்கள், திடீர் ரத்து அறிவிப்பால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பல தேர்வர்களுக்கு அவர்களது சொந்த மாநிலங்களைத் தாண்டி வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதனால் பயணம், தங்குமிடம் உள்ளிட்டவற்றுக்காகப் பணம் செலவழித்து தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது தங்களுக்கு ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்வு நடைமுறைகள் மீண்டும் கேள்விக்குறி:

இந்த ஆண்டு நீட்-யுஜி தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதேபோல், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 3,675 மாணவர்களுக்கு சியூஇடி தேர்வு மீண்டும் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது என்டிபிசி தேர்வும் ரத்து செய்யப்பட்டிருப்பது போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு ரத்துக்கான விரிவான காரணம் என்ன, மறுதேர்வு நடத்தப்படுமா, தேர்வர்களின் எதிர்காலம் என்ன என்பது தொடர்பாக என்டிபிசி தெளிவான விளக்கத்தை வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சூடுபிடிக்கும் உத்தரப் பிரதேச தேர்தல் களம்: பேச்சுவார்த்தைக்குத் தயாரான சமாஜ்வாதி – காங்கிரஸ்..!

MUST READ