காங்கிரஸ் கட்சியை “டெட் பாடி” என்றும், அக்கட்சியின் தலைவரை “டிராவல் ஏஜென்ட்” என்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சாத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை நேரில் ஆய்வு செய்த மாணிக்கம் தாகூர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அண்ணாமலையின் சமீபத்திய விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த மாணிக்கம் தாகூர், அண்ணாமலை இன்னும் பிரதமர் மோடியின் விசுவாசமான ஆதரவாளராகச் செயல்படுகிறாரா என்ற கேள்வியை அவரே தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார். மேலும், அண்ணாமலை பிரதமர் மோடியின் ஆதரவாளரா என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் விமர்சித்தார்.
தேர்தல் தோல்வி குறித்து விமர்சனம்
கடந்த கால அரசியல் நெருக்கடிகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், ராஜபக்சே மற்றும் ராஜா தொடர்பான விவகாரங்களால் மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீது கோபம் ஏற்பட்டிருந்த காலத்திலும் கட்சியினர் களத்தில் தைரியமாக நின்றதாகக் குறிப்பிட்டார்.
மேலும், “அண்ணாமலையைப் போல் ஒரு தேர்தலில் தோற்றவுடன் பாஜக வேஷ்டியைக் கழற்றி வைத்துவிட்டு, பாட்டைப் போட்டுக்கொண்டு சுற்றுபவர்கள் நாங்கள் அல்ல” என்று கூறி விமர்சித்தார்.
“வந்த சண்டையை விட மாட்டோம்”
தொடர்ந்து பேசிய மாணிக்கம் தாகூர், “உங்களைப் போல் பயந்து ஓடுபவர்கள் நாங்கள் அல்ல; நான் நின்று அடிப்பேன். நான் பிறந்த மண் மாவீரர்கள் மருது பாண்டியர்கள் பிறந்த மண். நாங்கள் அமைதியாக இருப்போம், வம்புக்குப் போக மாட்டோம்; ஆனால் வந்த சண்டையை விட மாட்டோம். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எழுந்து நின்று அடிப்போம்” என்று தெரிவித்தார்.
தமிழக அரசியலில் தொடரும் வார்த்தைப் போர்
காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களிடையே தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து விமர்சனங்கள் பரிமாறப்பட்டு வரும் நிலையில், அண்ணாமலையின் கருத்துகளுக்குப் பதிலளித்து மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ள இந்தக் கடுமையான விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
தவெக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை:மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்!
