கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையமும் காவல்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் அல்லது தலைமைச் செயலரிடமிருந்து புகார் வரவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தச் சூழலில், நவம்பர் 23-ம் தேதி மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
மாணிக்கம் தாகூர் வெளியிட்ட பதிவு:
இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் 24-ம் தேதி தனது எக்ஸ் தளப் பதிவில் மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாவது:
ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்பு ஆதரவாகப் பேசியிருந்தார்:
இந்த விவகாரம் முதன்முதலில் சர்ச்சையானபோது, நவம்பர் 11-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், அருள் விக்னேஷுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில், சமூக ஊடகத் தகவல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவரை விமர்சிப்பது சரியல்ல என்றும் கூறியிருந்தார்.
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம் என்று கூறியிருந்தார் மாணிக்கம் தாகூர்.
தற்போது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ. மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் ஏற்கெனவே மறுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் எவ்வாறு தொடர்கின்றன என்பது அடுத்தகட்டமாகக் கவனிக்கப்படுகிறது.
