Homeசெய்திகள்அரசியல்வி.எஸ். பாபு மீதான பாசம் 41 உயிரிழப்பில் ஏன் இல்லை?: உதயகுமார் கேள்வி

வி.எஸ். பாபு மீதான பாசம் 41 உயிரிழப்பில் ஏன் இல்லை?: உதயகுமார் கேள்வி

-

- Advertisement -

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழக முதல்வர் விஜயின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

குறிப்பாக, தவெக சட்டமன்ற உறுப்பினர் விஎஸ். பாபுவின் இறுதி அஞ்சலியில் முதல்வர் விஜய் காட்டிய அக்கறையையும், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின்போது அவர் நடந்துகொண்ட விதத்தையும் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.

அந்த வீடியோவில் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:

தவெக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, கடந்த 11ஆம் தேதி முதல்வர் விஜய் அனைத்து எம்எல்ஏக்களையும், அமைச்சர்களையும் மகாபலிபுரத்துக்கு அழைத்து எச்சரித்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்குப் பிறகும் சர்ச்சைகள் தொடர்வதாக உதயகுமார் குற்றம்சாட்டினார்.

தக்கோலம் காவல் நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜன் நள்ளிரவில் நடத்திய திடீர் ஆய்வு குறித்து கேள்வி எழுப்பிய அவர், காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இரவு பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற பெண் காவல் ஆய்வாளரை மீண்டும் அழைத்து விசாரணை நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், காவல் நிலையத்தில் அமைச்சரின் தலையீடு எந்த அடிப்படையில் நடைபெற்றது என்றும், இதுகுறித்து முதல்வர் ஏன் விளக்கம் அளிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

தவெக ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் தொடர்பாக வெளியாகும் சர்ச்சைகள் அரசு நிர்வாகத்திலும் காவல்துறையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் புகார், ஈரோட்டில் பெண் எஸ்.பி.யிடம் அமைச்சர் ஒருவர் கோப்புகளுடன் வீட்டுக்கு வருமாறு கூறியதாக வெளியாகியுள்ள தகவல் ஆகியவற்றையும் உதயகுமார் சுட்டிக்காட்டினார். இத்தகைய சம்பவங்கள் குறித்து முதல்வர் மௌனம் காப்பதாகவும் விமர்சித்தார்.

தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையின் மதகுகள் உரிய அனுமதியின்றித் திறக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை, தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதாகக் கூறப்படும் தகவல்கள் ஆகியவற்றையும் அவர் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டார். அமைச்சர்கள் தங்களது துறைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக சர்ச்சைகளில் சிக்குவதாகக் குற்றம்சாட்டினார்.

தவெக தலைவர்களைப் புகழ்ந்து விளம்பரப்படுத்தி, விஜயை மக்களின் நம்பிக்கைக்குரியவராகக் கட்டமைத்ததன் மூலம் கட்சி ஆட்சிக்கு வந்ததாகக் குறிப்பிட்ட உதயகுமார், தேர்தலுக்கு முன்பு மக்களிடம் அளித்த வாக்குறுதிகளில் எவற்றை நிறைவேற்றியுள்ளனர் என்பதை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விஎஸ். பாபுவின் இறுதி அஞ்சலி – கரூர் உயிரிழப்புகள் ஒப்பீடு*

தவெக சட்டமன்ற உறுப்பினர் விஎஸ். பாபுவின் மறைவு அனைவருக்கும் வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்ட உதயகுமார், அவரது இறுதிச் சடங்கில் முதல்வர் விஜய் நேரில் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தியதைப் பாராட்டினார்.

குறிப்பாக, பாபுவின் பூத உடலை முதல்வர் விஜய் காலணியின்றித் தூக்கிச் சென்று இடுகாடு வரை நடந்துசென்ற காட்சியைப் பார்த்தபோது நெகிழ்ச்சியாக இருந்ததாகத் தெரிவித்தார். இதனை வேஷம் என்று விமர்சிக்க விரும்பவில்லை என்றும், அது பாபு மீதான உண்மையான பாசத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஆனால், கரூரில் விஜயைக் காண வந்தபோது ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களிடம் முதல்வர் இதேபோன்ற அணுகுமுறையைக் காட்டியிருக்க வேண்டாமா? என்ற கேள்வி எழுவதாக உதயகுமார் தெரிவித்தார்.

“விஜய்தான் எங்கள் எதிர்காலம், விஜய்தான் எங்கள் உயிர் மூச்சு” என்று நம்பி வந்தவர்கள் உயிரிழந்தபோது, அவர்களின் குடும்பத்தினருக்கும் உயிரிழந்தவர்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா?

அப்போது கரூரிலிருந்து திருச்சிக்கும், பின்னர் சென்னைக்கும் சென்ற முதல்வர், அதன்பிறகு 72 நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்படும் நிலை ஏன் ஏற்பட்டது? என்று கேள்வி எழுப்பினார்.

“பிறப்புக்கும் எல்லா உயிருக்கும்” என்று கூறும் முதல்வர், தன்னை நம்பி வந்தவர்களின் உயிரிழப்புகளின்போதும் அதே அக்கறையை வெளிப்படுத்தியிருக்க வேண்டாமா என்றும் அவர் வினவினார்.

விஎஸ். பாபுவுக்கு அளிக்கப்பட்ட இறுதி மரியாதை போன்ற மரியாதை கரூரில் உயிரிழந்த 41 பேருக்கும் கிடைத்திருந்தால், விஜய் மக்களிடம் இன்னும் உயர்ந்த மதிப்பைப் பெற்றிருப்பார் என்றும் உதயகுமார் கருத்து தெரிவித்தார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அளிக்கப்படும் மரியாதையும், தன்னை நம்பி வந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மரியாதையும் ஒரே அளவில் இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்டார்.

“தேவை என்றால் ஒரு அணுகுமுறை, தேவையில்லை என்றால் வேறொரு அணுகுமுறை என்ற நிலை இருக்கக் கூடாது. இதை விமர்சனமாக அல்ல, ஒரு எதிர்பார்ப்பாகவே முன்வைக்கிறேன்.

இதே அணுகுமுறையை அனைவரிடமும் முதல்வர் விஜய் கடைப்பிடித்தால், தொண்டர்களை அரவணைப்பதில் அவருக்கு நிகர் அவரே என்று வரலாற்றில் இடம்பிடிக்க முடியும்.

ஆனால், விஎஸ். பாபுவுக்கு மட்டுமே இத்தகைய சிறப்பு இறுதி மரியாதை அளிக்கப்பட்டது என்ற எண்ணம் மக்களிடம் உருவானால், அது முதல்வரின் அரசியல் அணுகுமுறை குறித்த கேள்விகளை எழுப்பும். பொறுத்திருந்து பார்ப்போம்” என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர். மூலம் ஆட்சிக்கு வந்த கட்சி தவெக: தேர்தல் ஆணையத்தை ஒருபோதும் எதிர்க்க மாட்டார் முதல்வர் விஜய்!

MUST READ