‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ‘பழக்கடை மூர்த்தி’ (மூர்த்தி அண்ணன்) என்ற கதாபாத்திரத்தில் நடிகர் நமோ நாராயணா வெளிப்படுத்திய அறியாமையும் அலப்பறைகளும் திரையரங்குகளில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், அதே கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை அப்படியே நிஜ அரசியலில் பொருத்திப் பார்த்தால், தற்போதைய தமிழக முதல்வர் விஜய்யின் பிம்பத்தோடு அச்சாகப் பொருந்துவதை காணமுடியும்.


வெறும் வாய் சவடால், சூழல் புரியாத அறியாமை, சுய பிம்பம் பற்றிய போலி மாயை எனத் திரையில் மூர்த்தி அண்ணன் செய்த காரியங்களுக்கும், தமிழக அரசியல் களத்தில் முதல்வர் விஜய் செய்து வரும் காரியங்களுக்கும் இடையே உள்ள நேரடி ஒப்புமைகளை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
“டம்மி” என்ற உண்மை: உலகிற்குத் தெரியும், அவருக்குத் தெரியாது!
திரைப்படத்தில் மூர்த்தி அண்ணனுக்குத் தான் ஒரு “டம்மி” என்பதே தெரியாது. ஆனால், அவரை வைத்து வேலையை முடிக்கும் தரப்பினருக்கும், சுற்றியிருக்கும் கூட்டத்திற்கும், பார்க்கின்ற ஆடியன்ஸுக்கும் அது தெளிவாகத் தெரியும். அதே நிலைமைதான் அரசியல் களத்திலும் நீடிக்கிறது. தான் தான் தமிழ்நாட்டின் சர்வாதிகாரி போலவும், எல்லையற்ற அதிகாரம் கொண்ட முதல்வர் போலவும் விஜய் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால், அவர் வெறும் “பெயரளவு முதல்வர்” (Dummy CM) என்பதும், உண்மையான அதிகாரம் வேறு கைகளில் இருக்கிறது என்பதும் அவரைச் சுற்றியுள்ள மூத்த தலைவர்களுக்கும், அரசியல் சாணக்கியர்களுக்கும், தமிழக மக்களுக்கும் வெளிப்படையாகவே தெரிகிறது.
கூலிங் கிளாஸ் கெத்தும்… அரசியல் அறியாமையும்!
படத்தில் மூர்த்தி அண்ணனுக்குச் செஸ் விளையாடத் தெரியாது, பிசினஸ் டீல் பேசத் தெரியாது. ஆனால் கூலிங் கிளாஸைப் போட்டுக்கொண்டு “யானையை எடுத்தோமா… ராஜாவை அடித்தோமா…” என்று மாஸாக சீன் போடுவார். இறுதியில் அவர் எடுத்தது யானையும் இல்லை, அடித்தது ராஜாவையும் இல்லை; தனது முட்டாள்தனத்தால் நல்ல ஆட்டத்தையே கேவலப்படுத்திவிட்டார் என்பதுதான் வெளிப்படும்.
அரசியலிலும் விஜய் இதையேதான் செய்கிறார். ஆட்சி நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாது, அடிப்படை அரசியல் கோட்பாடுகள் புரியாது. ஆனால், கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு, பெரிய பெரிய பெயர்களை உச்சரித்து, எல்லாம் தெரிந்த அறிவு மேதை போல கெத்தாக வலம் வருகிறார். ஆனால், நடைமுறையில் அவர் எடுக்கும் முடிவுகளும் வெளிப்படுத்தும் அறியாமையும், ஒரு மாநில நிர்வாகத்தையே கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருக்கின்றன.
முன்னால் நிற்பது பொம்மை… பின்னால் இயக்கும் கைகள்!
‘ஜெயிலர் 2’ படத்தில் மூர்த்தி அண்ணன்தான் முன்னால் போய் நிற்பார்; டீல் பேசுவது போல தோற்றம் தருவார். ஆனால், பின்னணியில் இருந்து அனைத்து காய்களையும் நகர்த்துவது வேறு ஒருவர். மூர்த்தி அண்ணன் வெறும் காட்சிப் பொம்மைதான் என்பது அனைவருக்கும் தெரியும்.
இன்றைய தமிழக ஆட்சியிலும் விஜய் தான் ஆய்வு செய்கிறார், விஜய் தான் உத்தரவிடுகிறார் என்றெல்லாம் பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.
ஆனால், உண்மை என்னவென்றால் அவருக்குப் பின்னால் இருக்கும் ஜோதிடர்கள், பாஜக ஆலோசகர்கள் போன்ற பின்னணி நபர்கள்தான் ஆட்சி அதிகாரத்தையே இயக்கி வருகிறார்கள். விஜய் வெறும் கையெழுத்திடும் பொம்மையாக மட்டுமே செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு வெளிப்படையாகவே வைக்கப்படுகிறது.
திட்டங்களுக்கு உரிமை கொண்டாடும் மூர்த்தி அண்ணன் பாணி!
‘ஜெயிலர் 2’ படத்தில் மூர்த்தி அண்ணன் எதையும் செய்திருக்க மாட்டார்; ஆனால் எல்லாவற்றையும் தானே செய்ததாகக் கூறி எல்லாவற்றிற்கும் உரிமை கொண்டாடுவார்.
அதேபோன்றுதான், தமிழக முதல்வர் விஜய் அவர்களும் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு முத்திரைத் திட்டங்களை இன்று தன் கணக்கில் சேர்த்துக் கொள்ள முயல்கிறார். குறிப்பாக, கடந்த ஆட்சியில் ஏழை எளிய மக்களின் நலனுக்காகக் கொண்டுவந்த மகளிர் உரிமைத் தொகை, பெண்களின் கட்டணமில்லாப் பேருந்து பயணமான விடியல் பயணம், மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்கள், கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவு நூலகம் போன்ற மாபெரும் திட்டங்கள் அனைத்தையும் தாமே சிந்தித்துச் செயல்படுத்தியதைப் போலக் கூறி,
அவற்றுக்குத் தன் பெயரில் பெயர் மாற்றம் செய்து உரிமை கொண்டாடி வருகிறார். தான் உழைக்காமல் கிடைத்த திட்டங்களை எல்லாம் தன் சாதனையாகப் பிம்பம் கட்டமைக்கும் இந்த அரசியல் உத்தி, திரையில் மூர்த்தி அண்ணன் செய்யும் லூட்டிகளைத்தான் கண்முன்னே நிறுத்துகிறது.
திரையில் மூர்த்தி அண்ணனின் லூட்டி சிரிப்பை வரவழைக்கிறது. ஆனால், கோடிக் கணக்கான மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பவர், அரசியல் அறியாமையினால் பின்னால் சில அரசியல் சக்திகளின் ஆட்டுவிப்பினால் இயங்கும், பிறர் திட்டங்களுக்கு உரிமை கொண்டாடும் “மூர்த்தி அண்ணனாக” இருப்பது தமிழ்நாட்டின் சாபக்கேடே தவிர வேறில்லை.
– என்.கே.மூர்த்தி
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பாஜக ஏன் ஆதரிக்கிறது? பின்னணி குறித்த அரசியல் விவாதம்!
