அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அய்யாவழி சார்பில் அனைத்து மக்களுக்கும் பொதுவான வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக அய்யாவழி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக கல்லிடைக்குறிச்சியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
2026 தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதையடுத்து அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது அய்யாவழி அமைப்பும் தேர்தல் களத்தில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது.
இதுதொடர்பாக அய்யாவழியைச் சேர்ந்த நிர்வாகிகள், அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சியில் உள்ள கல்லிடைபதியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, சாமிதோப்பைச் சேர்ந்த அய்யாவழி அமைப்பின் நிர்வாகி தங்கமோகன் கூறுகையில், மக்களுக்குச் சேவை செய்வதற்காகத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சி மாறுவதும், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விரும்புவதும் மக்களைத் தரக்குறைவாக நடத்தும் செயலாகும் என விமர்சித்தார்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் ஏராளமான கோயில்களும், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அய்யாவழி பக்தர்களும் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுவரை இத்தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் அய்யாவழி மக்களின் வாக்கு வங்கியை நம்பியே வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது அய்யாவழி அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்புகள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருவதாகவும், தமிழகம் முழுவதும் 15,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் தங்களுக்குப் பலமான தளங்களாக இருப்பதாகவும் கூறினார்.
எனவே, அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் அய்யாவழி சார்பில் அனைத்து மக்களுக்கும் பொதுவான வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளதாகவும், அய்யாவின் திருவடியைத் தொழுது இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த முயற்சியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும், வரும் தேர்தல்களில் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் அய்யாவழி சார்பில் வேட்பாளர்கள் களமிறங்குவார்கள் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கடன் வாங்கி நாட்டை நடத்துவதும், சாதாரணத் திறப்பு விழாக்களுக்காகக் கோடிக்கணக்கில் மக்கள் பணத்தைச் செலவிடுவதும் தடுக்கப்பட வேண்டும் என்றார். ஊழலற்ற ஆட்சியை உருவாக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும், ஆன்மீகத்தையும் அரசியலையும் இரு கண்களாகக் கொண்டு இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் அய்யாவழி அமைப்பும் பொது வேட்பாளரை நிறுத்தத் திட்டமிட்டு வருவது அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சகோதர பாசத்தில் விழுந்த விரிசல்: காங்கிரஸ் கூட்டணிக்கு திமுக முற்றுப்புள்ளி வைத்த பின்னணி!
