
கர்நாடகா அரசு மேகதாது அணை விவகாரத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தாலும், சட்டரீதியாகவும் நடைமுறைச் சூழலிலும் தமிழ்நாட்டை மீறி அங்கு அணை கட்டுவது சாத்தியமற்றது என்று நீரியல் துறை நிபுணர் பேராசிரியர் ஜனகராஜ் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை திட்டத்தின் பின்னணி மற்றும் டெல்டா மாவட்டங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்துப் பல திடுக்கிடும் உண்மைகளைப் பகிர்ந்துள்ளார்.
மேகதாது அணை திட்டமும் ‘மறைமுகக் காரணங்களும்’
கர்நாடகா அரசு பெங்களூருவின் குடிநீர் தேவைக்காகவும் (4.75 டிஎம்சி), 400 மெகாவாட் நீர்மின் உற்பத்தி செய்வதற்காகவும் 67 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ராட்சத மேகதாது அணையைக் கட்டப்போவதாகக் கூறி வருகிறது. ஆனால், இது வெறும் குடிநீர் தேவைக்கான திட்டம் அல்ல என்றும், இதன் பின்னணியில் பல மறைமுக நோக்கங்கள் (Hidden Agendas) உள்ளதாகவும் பேராசிரியர் ஜனகராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
டேட்டா சென்டர்கள் மற்றும் தொழில் வளர்ச்சி: பெங்களூருவில் அமையவுள்ள பன்னாட்டு டேட்டா சென்டர்கள் (Data Centers) மற்றும் பெரு நிறுவனங்களுக்குத் தடையற்ற மின்சாரமும், அதிகளவு தண்ணீரும் தேவைப்படுகிறது. இதற்காகவே இந்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .
வரலாற்றுப் பிழை: ஏற்கெனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகா வழங்க வேண்டிய மாதாந்திரத் தண்ணீரைக் கூட முறையாக வழங்காமல், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடியே தமிழ்நாடு பெற வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில், புதிய அணை கட்டப்பட்டால் டெல்டா முழுமையாகப் பாழாகிவிடும்.
காவிரி டெல்டா மற்றும் மக்கள் வாழ்வாதாரம் எதிர்கொள்ளும் பேராபத்து
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதி முற்றிலுமாகப் பாலைவனமாக மாறக் கூடும் என எச்சரித்துள்ள அவர், மேகதாது அணை கட்டப்படும் பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளில் சுமார் 12,500 ஏக்கர் நிலப்பரப்பு நீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது. மேலும், அங்குள்ள சுமார் 9.5 லட்சம் மரங்கள் வெட்டப்படவுள்ளதோடு, பல்லாயிரக்கணக்கான வனவிலங்குகளின் வாழ்விடமும், பழங்குடி மக்களின் இருப்பிடமும் கேள்விகுறியாகும் என்றார்.

உப்புநீராக மாறிய நிலத்தடி நீர்: கடந்த 50-60 ஆண்டுகளாகத் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்பட்டதாலும், வண்டல் மண் வராததாலும் கடல் நீர் உட்புகுந்துள்ளது. நாகை மாவட்டத்தில் 100% நிலத்தடி நீரும், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 70 முதல் 80% நிலத்தடி நீரும் உப்புநீராகவும் (Saline), பயன்பாட்டுக்கு உதவாத நிலைக்கும் மாறிவிட்டன.
கழிவுநீர் கலப்பு: காவிரி மற்றும் அதன் கிளைக் கால்வாய்களில் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுகளும், நகராட்சிக் கழிவுநீரும் பெருமளவில் கலப்பதால் விவசாயமும் குடிநீரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன .
தீர்வு என்ன?
கர்நாடகாவிற்குத் தண்ணீர் தேவை என்றால், பெங்களூருவில் 25% முதல் 30% வரை வீணாகும் குடிநீர் விநியோகக் கசிவைத் (Transmission and Distribution Loss) தடுப்பது, கழிவுநீரை முழுமையாக மறுசுழற்சி செய்வது (Recycling) மற்றும் மழைநீர் சேகரிப்பைத் தீவிரப்படுத்துவது போன்ற மாற்று வழிகளைப் பின்பற்றலாம்.
மத்திய அரசு மற்றும் சுப்பிரமணியம் போன்றோரின் கருத்துகளைச் சுட்டிக்காட்டிய அவர், மேகதாது விவகாரத்தை அரசியல் ஆயுதமாகப் (Political Weapon) பயன்படுத்துவதை விடுத்து, மனிதநேயத்துடனும் சட்ட ரீதியாகவும் தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், சட்டரீதியான அனைத்து அனுமதிகளையும் பெறாமல் கர்நாடகாவால் மேகதாதுவில் அணை கட்டவே முடியாது என்பதே நிதர்சனம் என்றும் பேராசிரியர் ஜனகராஜ் தெரிவித்துள்ளார்.
