‘செல்ஃபி’ பட புகழ் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் விறுவிறுப்பான டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல இயக்குநர் வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராகப் (Creative Producer) பணியாற்றியுள்ளார்.
நட்சத்திரப் பட்டாளம் & செப்டம்பர் 10 ரிலீஸ்: ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் சுஹாஸ் வில்லனாக அறிமுகமாகிறார். மேலும் சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடலில் நடைபெறும் அபாயகரமான படகுப் போட்டியை (Boat Race) மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

டிரெய்லரில் மிரட்டும் காட்சிகள்: சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா மற்றும் டீசரின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
அபாயகரமான கடல் உலகம்: டிரெய்லரின் தொடக்கத்தில், “இந்த கடல் எவ்ளோ பெருசோ, அதுல இருக்கிற ஆபத்துங்க அதை விட பெருசு” என்று நடிகர் சத்யராஜின் கம்பீரமான குரலில் பின்னணி குரல் ஒலிக்கிறது.
வில்லனின் மிரட்டல் எண்ட்ரி: “சிங்கங்கள் இல்லாத காட்டை ஓநாய் கூட்டம் அரச ஆளுறக் கதையா நீ போன 20 வருஷத்துல பாமர பந்தையம் சாட்டா புலி கட்டுக்குள்ள போயிடுச்சுயா…” என்ற அதிரடி வசனத்துடன் வில்லன் சுஹாஸ் திரையில் தோன்றுகிறார். “இந்த ஊரோட படகு பந்தய டீம்னா அது சுனாமி ரைடர்ஸ் மட்டும்தான், எவன் வந்தாலும் அதை தடுக்க முடியாது” என அவர் சவால் விடுக்கிறார்.

சூரியின் அதிரடிப் பயிற்சி: இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் களமிறங்கும் சூரி, “லோக்கல் பிளேயர்ஸ் இல்லனா அது எப்படி ஊருக்கான டீமா இருக்கும், இவனுங்களுக்கு நான் டிரெய்னிங் கொடுத்து ஜெயிச்சு தரேன்” என்று கூறி மிதுன் ஜெய் சங்கர் அடங்கிய உள்ளூர் இளைஞர்கள் குழுவுக்குத் தீவிரப் பயிற்சி அளிக்கத் தொடங்குகிறார்.
எதிர்பார்ப்பைத் தூண்டும் திருப்பங்கள்: உயிரிழப்பு ஏற்படும் அளவுக்குக் கடுமையான பயிற்சிகள், அதன் காரணமாக சூரிக்கு எதிராகத் திரும்பும் ஊர் மக்கள் மற்றும் அணியினர், சுஹாஸுக்கும் சூரிக்கும் இடையிலானப் பகை, சத்யராஜின் பின்னணி எனப் பல சுவாரசியமானக் கேள்விகளுடன் டிரெய்லர் நகர்கிறது.
குறிப்பாக, சத்யராஜ் பேசும் “பந்தயமுங்குறது யார் பெரிய தாட்டியக்காரன்னு நடக்குற போட்டியில்ல காளி, பந்தயம்ங்குறது அறிவு” என்ற வசனமும், சூரியின் வித்தியாசமான பீடி குடிக்கும் ஸ்டைலும், அலைகளில் சீறிப்பாயும் படகுப் போட்டி காட்சிகளும் டிரெய்லரின் முக்கியச் சிறப்பம்சங்களாக அமைந்து, திரைப்பிரியர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
‘துரந்தர்’ போல ‘அரசன்’ படமும் தாக்கத்தை ஏற்படுத்தும்! சிம்பு நம்பிக்கை
