அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் நிறுத்தப்பட்டால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மீண்டும் திறந்து வைக்கப்படும் என்று ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


மேற்காசியப் பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்களால் ஈரானின் ராணுவக் கட்டமைப்பு பலத்த சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், தனது ராணுவக் கட்டமைப்பை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், தன் ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
60-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது அமெரிக்க தாக்குதல்
மேற்காசியாவில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானின் வான் பாதுகாப்புத் தளங்கள், ரேடார் கருவிகள், கடல்சார் தளங்கள், கடலுக்கு அடியில் கன்னி வெடிகள் வைக்கும் மையங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட முக்கிய ராணுவ இலக்குகளை அமெரிக்கப் படைகள் குண்டுவீசி அழித்துள்ளன.
அதேவேளையில், 1.80 கோடி பேரல் கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற 40 வணிகக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் பாதுகாப்பாகக் கடக்க அமெரிக்கப் படைகள் முழு பாதுகாப்பு அளித்துள்ளன.
ஈரானின் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் எச்சரிக்கை
ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாய் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்ததாவது:
நிபந்தனை: அமெரிக்கா தன் அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்தினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்.
தடைசெய்யப்பட்ட மண்டலம்: வரும் நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படும். ஜலசந்திக்கு வெளியே உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியைத் “தடைசெய்யப்பட்ட மண்டலமாக” ஈரான் விரைவில் அறிவிக்கும்.
பொருளாதாரத் தடை: ஈரானின் அனுமதியின்றி இந்தத் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழையும் அல்லது கடக்க முயலும் வணிகக் கப்பல்கள் அனைத்தும் ஈரானின் பொருளாதாரத் தடைப் பட்டியலில் சேர்க்கப்படும்.
முழுமையான கட்டுப்பாடு: பாதுகாப்பு காரணங்களுக்காக ஹார்முஸ் ஜலசந்தியின் முழுமையான கட்டுப்பாடு ஈரானின் வசமே உள்ளது. மீண்டும் போக்குவரத்திற்காக அதைத் திறப்பதற்கான விதிமுறைகளை ஈரான் தயாரித்து வருகிறது.
இப்பகுதியில் கப்பல் போக்குவரத்து சீரடைய வேண்டும் என்றால், தற்போதைய மோதல்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்
