விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 2 டன் மலர்கள் மற்றும் 50 கிலோ சந்தன காப்புடன் முந்தி விநாயகர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டனர்.


2 டன் மலர்களால் சிறப்பு அலங்காரம்
புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு வழிபாடு, வேள்வி பூஜைகள் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகருக்கு 50 கிலோ சந்தன காப்பு அணிவிக்கப்பட்டு, சுமார் 2 டன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும், மயில் தோகையைப் போன்ற மாலையும் விநாயகருக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
19 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட விநாயகர்
புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் ஒரே கல்லால் செய்யப்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை உள்ளது. 19 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட இந்த சிலையின் எடை 190 டன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட விநாயகரை தரிசிக்க விநாயகர் சதுர்த்தி நாளில் ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.
கொழுக்கட்டை உள்ளிட்ட படையல்கள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை உள்ளிட்ட இனிப்பு வகைகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கோயில் முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோயில் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், பக்தர்கள் மற்றும் வாகனங்களின் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் அந்தப் பகுதியில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
பக்தர்கள் பக்திப் பரவசம்
2 டன் மலர்கள் மற்றும் 50 கிலோ சந்தன காப்புடன் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முந்தி விநாயகரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் பகுதியில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
