தமிழக அரசியல் களம் தற்போது வரவிருக்கும் இடைத்தேர்தலால் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுகவின் அணுகுமுறை, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள், பாஜகவின் பின்னணி மற்றும் ஈவிஎம் (EVM) விவகாரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளாா். 
இடைத்தேர்தல் களம்: திமுகவின் வியூகமும் பாஜகவின் பின்னணியும்
இடைத்தேர்தலில் திமுக போட்டியிடாது, புறக்கணிக்கும் என்றே பலரும் எதிர்பார்த்த நிலையில், தவேகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடனேயே திமுக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. தவெகவை விட திமுக பன்மடங்கு பெரிய கட்டமைப்பைக் கொண்ட கட்சி. எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு தவேகவின் வளர்ச்சியை திமுக வேடிக்கை பார்க்காது. உண்மையில், இந்தத் தேர்தலில் போட்டியிடும் முடிவை நிர்ணயித்ததே பாஜகதான். தேர்தலில் விஜய் ஜெயிக்க வேண்டும் அல்லது தோற்க வேண்டும் என்பவை பாஜகவுடனான புரிதலைப் பொறுத்தே அமையும். தேர்தல் ஆணையம் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதற்கு வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள நபர்களின் பெயர்களை நீக்குவதே சான்றாகும்.

தவேக வேட்பாளர்கள் மீதான அதிருப்தி: மக்கள் பாடம் புகட்டுவார்களா?
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கே மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது நேரடியான குதிரை பேரமாகும். சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களாக இருந்துவிட்டு, பதவி விலகிய சில நாட்களிலேயே தவேக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிரச்சாரத்திற்குச் சென்ற இடங்களில் மக்கள் இவர்களைத் துரத்திய நிகழ்வுகள், வேட்பாளர்கள் மீது பொதுமக்கள் மத்தியில் நிலவும் கடும் அதிருப்தியையே காட்டுகிறது. இதனால் தவேக வேட்பாளர்கள் தோற்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. தவேகவின் தற்போதைய ஆட்சியும் செயல்பாடுகளும் மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளன.
கூட்டணி அரசியலும் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடும்
விசிக தலைவர் திருமாவளவன் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையைக் கூட்டணியில் சேர்க்கக் கூறியிருந்தாலும், விஜய்யின் அரசு மற்றும் செயல்பாடுகள் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகள் தவேக கூட்டணிக்கு வர மறுப்பதற்குக் காரணமும் இதுவே. திருமாவளவன் தவேகவிற்கு ஆதரவு அளித்ததன் பின்னணியில், பாஜகவின் மறைமுக ஆட்சி (குடியரசுத் தலைவர் ஆட்சி) தமிழகத்தில் வந்துவிடக் கூடாது என்ற சூழலே இருந்தது. திமுக கூட்டணி முறிவு என்பது அரசியல் களம் சார்ந்த ஒன்று.
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விமர்சனம்
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மேற் கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் தீவிரமான ஒன்றாகத் தெரியவில்லை. முதலீடுகளை ஈர்க்கச் செல்லும்போது துறை சார்ந்த தொழில்துறை அமைச்சரைக் (கீர்த்தனா) கூடவே அழைத்துச் செல்லாமல், எந்தவொரு அதிகாரப்பூர்வ பொறுப்பும் இல்லாத நபர்களுடன் பயணம் மேற்கொள்வது கேள்விகளை எழுப்புகிறது. பயணத்திற்கு முன்பாக எத்தனை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது, எவ்வளவு முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகிறது போன்ற எந்தவொரு அதிகாரப்பூர்வ விவரத்தையும் தெளிவுபடுத்தாமல் சொந்த விருப்பத்திற்குச் சொல்வது போல அமைந்திருக்கிறது.
