தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் அரசுப் பேருந்து தாமதமாக வந்ததாகக் கூறி, ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில், அரசுப் பேருந்து நடத்துநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் கடும் மனவேதனை அடைந்த நடத்துநர் பணிமனையிலேயே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதிக்குச் செல்ல வேண்டிய அரசுப் பேருந்து ஒன்று குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படவில்லை என்றும், தாமதமாக வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததையடுத்து, ஸ்ரீவைகுண்டம் தவெக தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் அவர்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் முறையான புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சம்மந்தப்பட்ட அரசுப் பேருந்தின் நடத்துநர் ஆறுமுகம் என்பவர் மீது தொடர்புடைய போக்குவரத்துக் கழகப் பணிமனை மேலாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.
பணிமனையில் அதிர்ச்சி சம்பவம்
தனது மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மனமுடைந்து காணப்பட்ட நடத்துநர் ஆறுமுகம், தூத்துக்குடியில் உள்ள பணிமனை வளாகத்திலேயே இன்று திடீரென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். எதிர்பாராத இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் மற்றும் பணிமனைப் பணியாளர்கள், அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சையளிப்பட்டு வரும் நிலையில், அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஓர் எம்.எல்.ஏ.வின் புகாரைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அரசு ஊழியர் விபரீத முடிவு எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தமா? தற்கொலை தீர்வல்ல!
உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொண்டு உதவி பெறலாம்.
உதவிக்கு அழைக்க வேண்டிய எண்: 104
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அதிர்ச்சி: முதல்வர் மருந்தக பெண் ஊழியருக்கு கத்திகுத்து!
