உயிரிழந்தவர்: பெரிய கருப்பன் (17), கணேசனின் மகன்
சம்பவம்: வைக்கோல் லாரி மீது தார்பாயை அகற்றும் போது உயர் மின் அழுத்தக் கம்பி உரசியது
சேதம்: லாரி முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது; சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
நடவடிக்கை: தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபாடு; போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மீது உயர் மின் அழுத்தக் கம்பி உரசிய விபத்தில், 17 வயது சிறுவன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள மார்க்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தஞ்சை மாவட்டத்திலிருந்து லாரிகளில் வைக்கோல் ஏற்றி வந்து, சாணார்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
வழக்கம்போல இன்று தஞ்சையிலிருந்து வைக்கோல் ஏற்றி வந்த லாரி, அவரது சொந்த ஊரான மார்க்கம்பட்டி அருகே உள்ள எல்லப்பட்டி பகுதிக்கு வந்தது. அங்கு வைக்கோல் விற்பனை செய்வதற்காக, லாரியின் மேல் பகுதியை மூடியிருந்த தார்பாயை கணேசனின் 17 வயது மகன் பெரிய கருப்பன் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக லாரியின் மேல் பகுதியில் இருந்த உயர் மின் அழுத்தக் கம்பி மீது லாரி உரசியுள்ளது. இதனால் உடனடியாக லாரி முழுவதும் மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்து எரிந்தது.
மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்த சிறுவன் பெரிய கருப்பன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையின் நடவடிக்கை
லாரி தீப்பிடித்து எரிவதைக் கண்ட அப்பகுதி ஊர் பொதுமக்கள் உடனடியாக ஓடிவந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், தீ கட்டுக்கடங்காமல் வேகமாகப் பரவியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாகக் காட்சி அளித்தது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீவிரமாகப் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தகவலறிந்து வந்த சாணார்பட்டி காவல்துறையினர், உயிரிழந்த சிறுவன் பெரிய கருப்பனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தஞ்சையிலிருந்து கால்நடைத் தீவனத்திற்காக வைக்கோல் ஏற்றி வந்த லாரியால், உரிமையாளரின் சொந்த மகனே மின் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
