கடலூர் அருகே கீழ்அழிஞ்சிப்பட்டு பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ஒருவரின் வீட்டில், மதியம் குடை ஒன்றில் இருந்து தொடர்ந்து சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், குடையின் அருகே சென்று பார்த்தபோது, அதற்குள் பாம்பு பதுங்கியிருப்பது தெரியவந்தது.


இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். இதையடுத்து பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர், பாம்புடன் குடையை வீட்டில் இருந்து வெளியே எடுத்துவந்தார். அப்போது குடைக்குள் இருந்த பாம்பு சீறிக்கொண்டு வெளியே வந்த நிலையில், பாம்பு பிடி வீரர் செல்லா அதனை லாவகமாக பிடித்தார். பிடிபட்டது சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு என்பது தெரியவந்தது.
இதேபோல்…
கடலூர் முதுநகர் அருகே சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் ஏ.சி. எந்திரத்திற்குள் பாம்பு புகுந்து பதுங்கியிருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், உடனடியாக பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற அவர், ஏ.சி. எந்திரத்திற்குள் பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடித்தார். அந்த பாம்பும் சுமார் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பு என்பது தெரியவந்தது.
இதையடுத்து குடைக்குள் மற்றும் ஏ.சி. எந்திரத்திற்குள் பதுங்கியிருந்த 2 நல்ல பாம்புகளையும், கடலூர் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்ற பாம்பு பிடி வீரர் செல்லா, அவற்றை பாதுகாப்பாக விட்டார்.

வீட்டில் குடைக்குள்ளும், தனியார் நிறுவனத்தில் ஏ.சி. எந்திரத்திற்குள்ளும் நல்ல பாம்புகள் பதுங்கியிருந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
