திருத்தணி அருகே அரசு பேருந்தில் CNG எரிவாயு முற்றிலும் தீர்ந்து போனதால், 50க்கும் மேற்பட்ட பயணிகள் நள்ளிரவு நேரத்தில் நடுவழியில் சிக்கித் தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பல பேருந்துகளில் டீசல் செலவைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் இயற்கை எரிவாயுவான CNG பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருவள்ளூர் அரசு போக்குவரத்துப் பணிமனைக்கு சொந்தமான 97-ம் எண் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளிலும் CNG வசதி பொருத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஒரு அரசு பேருந்து நேற்று இரவு வழக்கம் போல் திருத்தணி நோக்கி புறப்பட்டது.
நடுவழியில் தீர்ந்த CNG
திருத்தணி அருகே காசிநாதபுரம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அதில் இருந்த CNG எரிவாயு திடீரென முற்றிலும் தீர்ந்து போனதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்து நடுவழியிலேயே நின்றது.
பின்னர் பேருந்து தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் பேருந்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பயணிகள் திருத்தணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
35 கி.மீ. தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பேருந்து
CNG தீர்ந்து போனதால் நடுவழியில் நின்ற பேருந்தை மீண்டும் இயக்குவதற்கு எரிவாயு நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக பேருந்தை சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ள திருவள்ளூருக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
இதையடுத்து, மற்றொரு வாகனம் மூலம் கயிறு கட்டி அந்த அரசு பேருந்து திருவள்ளூருக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காட்சியை பார்த்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.
அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்
அரசு பேருந்துகளில் CNG பயன்படுத்தப்படுவதன் மூலம் டீசல் செலவைக் குறைப்பதுடன் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்த முடியும். ஆனால், பேருந்து புறப்படுவதற்கு முன்பு அதில் போதுமான அளவு CNG எரிவாயு உள்ளதா என்பதை முறையாக பரிசோதித்து உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
CNG போதுமான அளவில் இருப்பு உள்ளதா என்பதை கண்காணிக்காமல் பேருந்துகளை இயக்க அனுமதிப்பதாக பணிமனை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பையும், தடையற்ற போக்குவரத்தையும் கருத்தில் கொண்டு, CNG பேருந்துகளின் எரிவாயு இருப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் மின்வெட்டு மீண்டும் சர்ச்சை! பல மாவட்டங்களில் மக்கள் அவதி – உதயநிதி கேள்வி
