நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்து, அவர்களின் கைரேகை மற்றும் கண்ரேகைகளைப் போலீசார் பதிவு செய்து வரும் நடவடிக்கை பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் கடுமையான அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


காவல் நிலையத்தின் அதிரடி நடவடிக்கை: சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வசித்து வரும் மேலப்பாளையம் பகுதியில், நெல்லை மாநகரக் காவல் துறை சார்பில் விசாரணை என்ற பெயரில் மக்களுக்குக் கடும் நெருக்கடி கொடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எவ்வித முன் சம்மனோ அல்லது அழைப்பாணையோ இன்றி மக்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைக்கும் போலீசார், அவர்களைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்தும், கையெழுத்து வாங்கியும், கைரேகை மற்றும் கண்ரேகைப் பதிவுகளைப் பெற்ற பின்னரே வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.
காவல்துறை அளிக்கும் விளக்கம் என்ன?
இச்சம்பவம் குறித்துக் காவல்துறை தரப்பில் கேட்கப்பட்டபோது: “சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்தே தற்போது தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. வெளிமாநிலங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இங்குள்ளவர்களுக்கு ஏதேனும் தொடர்புள்ளதா என்பதை அதிநவீனத் தொழில்நுட்பம் மூலம் கண்டறியவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது மேலப்பாளையத்தில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதுமே நடத்தப்பட்டு வரும் வழக்கமான நடவடிக்கை தான்” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
“வேறு மாநில வழக்குகளில் சிக்க வைக்க சதியா?” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆவேசம்
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான எம்.எச்.ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எவ்வித அழைப்பாணையும் வழங்காமல் காவல் நிலையத்திற்கு அழைத்து, கைரேகை, கண்ரேகை மற்றும் புகைப்படங்களைச் சேகரிக்கும் நெல்லை மாநகரக் காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது. வெளிமாநில வழக்குகளைப் பரிசோதிக்கிறோம் என்ற பெயரில் மேலப்பாளையம் முஸ்லிம்களை வேறு மாநில வழக்குகளில் சிக்க வைக்கச் சதி நடக்கிறதோ என்ற அச்சம் எழுகிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை எப்போதுமே பதற்றமாக வைத்திருக்கும் சூழலைக் காவல்துறை உருவாக்கி வருகிறது. இத்தகைய தேவையற்ற நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும்.” என எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
வாழ்வாதாரம் பாதிக்கப்படும் – மனிதநேய ஜனநாயகக் கட்சி கவலை
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் பிலால் இதுகுறித்துப் பேசுகையில், “சட்டம் ஒழுங்கிற்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. ஆனால், தினசரி கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் சாதாரண மனிதர்களைக் காவல் நிலையத்திற்கு அழைக்கும்போது, சுற்றத்தாரும் சமூகமும் அவர்களை குற்றவாளியைப் போலப் பார்க்கும் நிலை ஏற்படுகிறது. இது அவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்” எனக் கவலை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் விபரங்களைச் சேகரிக்க வட்டாட்சியர் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அது கைவிடப்பட்டதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோல, மேலப்பாளையத்தில் காவல்துறை மேற்கொண்டு வரும் இந்த ரேகைப் பதிவு நடவடிக்கையையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
