ரூ.2,000-க்கு மேல் நடைபெறும் குறிப்பிட்ட வணிக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அக்டோபர் 15 முதல் 0.4 சதவீத Merchant Discount Rate (MDR) அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இந்த நடைமுறையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


ரூ.2,000-க்கு மேல் 0.4% MDR
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய UPI கட்டமைப்பின்படி, ரூ.2,000-க்கு மேல் நடைபெறும் குறிப்பிட்ட Person-to-Merchant (P2M) பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத MDR விதிக்கப்பட உள்ளது. ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் அதிகபட்சமாக ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் 15, 2026 முதல் அமலுக்கு வருகிறது.
தனிநபர் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை
அதே நேரத்தில், தனிநபருக்கு தனிநபர் பணம் அனுப்பும் P2P UPI பரிவர்த்தனைகளுக்கு எந்த MDR-ம் கிடையாது. மேலும், ரூ.2,000 வரையிலான வணிக UPI பரிவர்த்தனைகளும் தொடர்ந்து கட்டணமின்றி இருக்கும். சிறு வணிகர்களுக்கான zero-MDR விதிகளும் தொடரும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜோதிமணி எதிர்ப்பு
இந்த நிலையில், ரூ.2,000-க்கு மேலான வணிக UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத MDR விதிக்கும் முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஜோதிமணி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கட்டணம் நாடு முழுவதும் உள்ள சிறு வணிகர்கள், நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் UPI சேவை தொடர்ந்து கட்டணமற்றதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுமா?
மத்திய நிதியமைச்சகத்தின் விளக்கப்படி, MDR என்பது வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம் அல்ல. வங்கிகள் மற்றும் UPI செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களிடம் இந்த கட்டணத்தை மாற்றிவிடக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 96 சதவீத வணிக UPI பரிவர்த்தனைகள் இந்த MDR-ஆல் பாதிக்கப்படாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
